
05.03.2025 – சென்னை
‘தி.மு.க., நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பதல்ல’ என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி; அதை யாரும் புறக்கணிக்கக்கூடாது என, பா.ஜ.,வினரும், அவர்களின் கொள்கை வழி அமைப்பினரும், தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ‘சமஸ்கிருதம்தான் பாரதத்தின் மூலமொழி’ என, சபையில் குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே தவறான பரப்புரை.
மத்திய அரசின் அலுவல் மொழிதான் ஹிந்தி. அத்துடன் ஆங்கிலம், இணை அலுவல் மொழியாக இருக்கிறது. ஹிந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. இந்தியா என்பதே, பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களை கொண்டது.
கடந்த 1965ம் ஆண்டு பார்லிமென்டில் அண்ணாதுரை உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் 100க்கு 40 பேர் ஹிந்தி பேசுவதாகக் கூறி, அதை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றனர். ஆனால், 40 சதவீதம் பேர் என்பதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், ஹிந்தி ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறது, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை.
‘ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதும் ஆட்சி மொழியாவதற்கான தகுதியைப் பெற்றுவிடாது. மொழிப் பிரச்சினையில் தி.மு.க., கொள்கை என்னவென்றால், இந்தியாவில் முக்கிய மொழிகளாக உள்ள 14 மொழிகளும், தேசிய மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆட்சிமொழி தகுதி தர வேண்டும்’ என, வாதாடினார்.
தி.மு.க.வின் நோக்கம், ஹிந்தியை எதிர்ப்பதல்ல. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு, சமமான அங்கீகாரம் வேண்டும். மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக, அலுவல் மொழிகளாக, அனைத்து மொழிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகிரவும்: