
06.03.2025 – திருநெல்வேலி
திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையஞ் செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம் 45. இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. ஊராட்சி தேர்தல் மோதல், ஒரே சமூகத்தினர் இடையே நடந்த கொலைகள், வெட்டு குத்து வழக்குகளிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். இவர் தொடர்புடைய ஒரு வழக்கில் கடந்த 2022 மார்ச் 10ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சி கூற இருந்தார்.
அவர் சாட்சி கூறினால் வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என திட்டமிட்ட கும்பல் அன்று காலை அவர் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்ற போது வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேஷ் குமார், முதல் குற்றவாளியான செல்வராஜுக்கு தூக்குத்தண்டனை விதித்தார். அந்தோணி பிரபாகர், அருள் பிலிப், ஆண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு இரண்டு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இரு தரப்பினர் இடையே நடந்த மோதல்களில் தண்டனை வழங்கப்பட்டதால் திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பகிரவும்: