
14.03.2025 – கோவை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 54 (எஸ்.எஸ்.ஐ.,) இவர். கடந்த 1997ம் ஆண்டு முதல், போலீஸ் துறையில் உள்ளார். கடந்த, 2024ம் ஆண்டு ஆக., மாதம் முதல் கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவில் ஆய்வாளரின் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவரது இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில், மனைவி கல்யாணியுடன் கோவைப்புதுார் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்றுள்ளார். பின்னர், போலீசாருடன் காரமடையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து இரவு வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரங்களில் தனது அறையை மூடிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் மனைவி கதவை தட்டி, தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் கதவை திறந்து சொக்கலிங்கம் வெளியில் வந்தார்.
இதன் பின்னர், அவர் பணி நிமித்தமாக வெளியில் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதையடுத்து, அதிகாலை 1:50 மணியளவில் அவிநாசி சாலையில் உள்ள வ.உ.சி., மைதானத்திற்கு சென்ற சொக்கலிங்கம், அவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த தனது மனைவியின் சேலையை பயன்படுத்தி அங்கிருந்த ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சொக்கலிங்கம் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பார்த்து விட்டு ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து சொக்கலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பணிச்சுமை?
கடந்த சில நாட்களுக்கு முன் தீவிரவாத தடுப்பு பிரிவில் நடந்த மகளிர் தின விழாவில் அசத்தலாக பாட்டு பாடியுள்ளார். மேலும், கடந்த புதன்கிழமை காரமடை நிகழ்ச்சிக்கு சென்று வரும் வழியிலும் பாட்டு பாடிக்கொண்டு ஜாலியாக வந்துள்ளார். அவருக்கு பணியில் எந்த சுமையும் இல்லை எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகிரவும்: