

மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று… விஞ்ஞானிகள் கண்டறிந்த கோள்..!
சமீபத்தில் கண்டறிந்துள்ள கோளில் மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இது பூமியில் பதிவான வேகமான காற்றை விட 130 மடங்கு அதிகம்.
பூமியில் சிறிய புயல்களே பேரழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. இதுவரை பதிவான மிக அதிக வேக புயல் மணிக்கு 407 கி.மீ வேகத்தில் வீசியது. ஆனால், தற்போது வானியலாளர்கள் ஒரு புறக்கோளில் மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்றைக் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வானிலையை உருவாக்கும் திறன் கொண்டது.
பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் WASP-127b என்ற ஒரு பெரிய வாயுப் புறக்கோள் உள்ளது. வியாழன் கிரகத்தை விட சற்று பெரியதான இது, மிகக் குறைந்த நிறையைக் கொண்டுள்ளது. 2016 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புறக்கோளின் பூமத்திய ரேகையில் சக்திவாய்ந்த சூறாவளி காற்று வீசும் ஒரு பெரிய வளையம் உள்ளது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற வாயு கிரகங்களின் வெளிப்புற வளையங்களைப் போலவே இதுவும் உள்ளது.
ஜனவரி 21 ஆம் தேதி “அஸ்ட்ரானமி அண்ட் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்” என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த சூறாவளி காற்றின் வேகம் விளக்கப்பட்டுள்ளது. சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) விஞ்ஞானிகள், மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) உதவியுடன் இந்த காற்றின் வேகத்தை அளவிட்டனர்.
பகிரவும்: