
04.03.2025
வாஷிங்டன்
அமெரிக்கா இதை நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ளாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே வெள்ளை மாளிகையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. உக்ரைன் அதிபர் வெளியேற்றப்பட்டார். பின்னர், கனிம ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமலும், கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படாமலும் முடிவடைந்தன.
இந்நிலையில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிக தொலைவில் உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது ஜெலென்ஸ்கியால் கூறப்பட்டிருக்கக்கூடிய மிக மோசமான அறிக்கை, அமெரிக்கா இதை நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ளாது. ஐரோப்பா உக்ரைனைப் பாதுகாக்கச் செலவிட்ட பணத்தை விட, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதற்கு அதிக பணத்தைச் செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பகிரங்கமாக மோதியதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் மாறி, மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராணுவ உதவிகள் நிறுத்தம்
இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில், ‘உக்ரைனுடன் கனிம வள ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்பது சந்தேகம் தான். வெறும் போருக்காக உக்ரைனுக்கு 350 பில்லியன் டாலர் கொடுத்த பைடனின் செயல் முட்டாள் தனமானது’ என டிரம்ப் கூறியிருந்தார்.
இதையடுத்து, ‘உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. ‘பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் அமெரிக்க இந்த முடிவு எடுத்துள்ளது’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பகிரவும்: