
11.03.2025 – போர்ட் விலா
ஐ.பி.எல்., எனப்படும், ‘இந்தியன் பிரீமியர் லீக்’ அமைப்பின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான லலித் மோடி, ‘டி – 20’ கிரிக்கெட் போட்டிகள் நடத்தியதில், பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, 2010ல் குற்றஞ்சாட்டப்பட்டது.
அலெர்ட் நோட்டீஸ்
விசாரணைக்கு பயந்து, அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த அவரை நாடு கடத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது.
இதில், இருந்து தப்புவதற்காக, தென் பசிபிக் தீவுகளில் உள்ள வனுவாட்டு என்ற நாட்டில் தஞ்சம் அடைந்த அவர், அந்நாட்டு குடியுரிமை பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தன் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க விரும்புவதாக லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் லலித் மோடி கடந்த 7ம் தேதி விண்ணப்பித்தார்.
இந்நிலையில், ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீசை தொடர்பு கொண்ட மத்திய அரசு அதிகாரிகள், லலித் மோடிக்கு எதிராக, ‘அலெர்ட் நோட்டீஸ்’ பிறப்பிக்கும்படி, 24 மணி நேரத்தில் இரண்டு முறை கோரிக்கை விடுத்தனர்.
உரிய நீதிமன்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அது ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனுவாட்டு அரசை தொடர்பு கொண்ட மத்திய அரசு, லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தது. அவரது வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தது.
இதை ஏற்றுக்கொண்ட வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாத், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி அந்நாட்டு குடியுரிமை கமிஷனுக்கு நேற்று உத்தரவிட்டார்.
உரிமை அல்ல
இதுகுறித்து பிரதமர் ஜோதம் நபாத் வெளியிட்ட அறிக்கை: வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒருவிதமான சலுகைதானே தவிர; உரிமை அல்ல. விண்ணப்பதாரர்கள் நியாயமான காரணங்களுக்காக குடியுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, லலித் மோடியை நாடு கடத்த, வனுவாட்டு அரசிடம் இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகிரவும்: