பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்த பொது நடவடிக்கை செயலணியை உருவாக்குங்கள்.

அண்மைய பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களை மீண்டும் ஆபத்தை நோக்கித் தள்ளும் வகையிலன்றி, அவர்களைத் தேசிய நீரோட்டத்துக்குள் இணைக்கும் வகையில் மீள்கட்டுமானப்பணிகள் அமையவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு, பேரழிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுரிமையைப் பாதுகாக்கும் வகையில் கரிசனையுடைய சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்கப்படவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து மலையக மக்களின் பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவரும் சிவில் செயற்பாட்டாளர்களான கௌதமன் பாலச்சந்திரன், நடேசன் சுரேஷ், அன்டனி ஜேசுதாஸன், அருணாச்சலம் சண்முகவடிவு, செல்வராஜா இராஜசேகர், ஜீவரட்ணம் சுரேஷ், கமலேஸ்வரி இலட்சுமணன், ஜெஹன் ஜெகதீசன், வேலுசாமி வீரசிங்கம், சரண்யா அருண்பிரசாத் மற்றும் அனித்ரா வரயா ஆகியோர் அடங்கிய மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளுக்கு அமைய, ‘தித்வா’ சூறாவளியை அடுத்து தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களில் 99 சதவீதமானோர் மத்திய மலைநாட்டின் 5 மாவட்டங்களில் உள்ளனர். அதேபோன்று இடம்பெயர்ந்து தற்காலிகமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களில் 95 சதவீதமானோர் குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தோரில் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல முடியாதவர்களில் மிக அதிகமானோர் தோட்டங்களில் வாழும் மலையகத்தைச் சேர்ந்த குடும்பங்களாவர். அனர்த்தத்தின் பின்னர் நாடு முன்நோக்கிப் பயணிப்பதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகிறது. ஆனால் அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் இதில் பெருமளவுக்கு உள்வாங்கப்படவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி செயலாற்ற வேண்டும்.

இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கங்கள் மற்றும் விளைவுகளால் ஏற்படும் அவலங்கள் அனர்த்தத்துக்கு முன்னரான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் கட்டமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டவை என்பதையே அனர்த்தம் பற்றிய கற்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே இப்பேரழிவு மலையகத்தில் வாழும் விளிம்பு நிலையிலுள்ள மக்களை மிகமோசமாகப் பாதித்திருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

இருப்பினும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களைப் பெறுவதிலும், இப்பேரழிவிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதிலும் மலையகத் தமிழ்மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

அரசாங்கம் இச்சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்காமை, அரசாங்கத்தின் உயர்மட்ட கொள்கை வழிகாட்டல்களில் உள்ள குறைபாடுகள், மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்க அதிகாரிகளுக்குப் போதிய அனுபவம் இன்மை, அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அவர்களது காணி உரிமை குறித்த தெளிவின்மை போன்றன அதற்கான முக்கிய காரணங்களாகும். இங்கு அரசாங்கத்தின் கவனக்குறைவானது மலையகத்தில் நிவாரணம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் பணிகளுக்குப் பாரிய இடையூறாக உருவெடுத்துள்ளது.

அத்தோடு காணிகளை அடையாளம் காணும் செயன்முறை மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான தகுதி போன்ற கொள்கைகளில் நிலவும் தெளிவின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை என்பன தோட்டப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆபத்தை நோக்கித் தள்ளும் வகையில் மீள்கட்டுமானப்பணிகள் அமையக்கூடாது. மாறாக அவர்களது நிலையை மேம்படுத்தும் விதத்திலும் ஏனைய மக்களைப் போன்று அவர்களைப் பொது நீரோட்டத்துக்குள் உள்ளடக்கும் வகையிலும் அவை அமையவேண்டும்.

அதேபோன்று நிவாரணம் வழங்கல், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமானம் என்பன தொடர்பில் தெளிவானதும், உத்தியோகபூர்வமானதுமான தகவல் தொடர்பாடல் அவசியமாகும். அதிலும் குறிப்பாக அந்த அறிவிப்புக்கள் கட்டாயமாக தமிழ்மொழியிலும் வெளியிடப்படவேண்டும்.

இவ்விவகாரம் பற்றிய கலந்தாலோசனைகளிலும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் முனைப்பான பங்கேற்பாளர்களாக பாதிக்கப்பட்ட மலையக மக்களும் உள்வாங்கப்படவேண்டும். அம்மக்களை குறுகிய அறிவித்தலுடனோ அல்லது எவ்வித முன்னறிவிப்புமின்றியோ முகாம்களிலிருந்து அகற்றவோ, அலைக்கழிக்கவோ கூடாது.

அதுமாத்திரமன்றி அரச, பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் மலையக தமிழ்மக்களின் வீட்டு உரிமைகள் மற்றும் காணி உரிமைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் தெளிவான கொள்கை அறிக்கை வெளியிடப்படவேண்டும்.

மேலும் மலையகப் பகுதிகளில் நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு மேலதிக பணியாளர்கள் மற்றும் ஏற்பாடுகள் அவசியமாகவுள்ளது. நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான உதவிகளை வழங்குவதில் பெருந்தோட்டக் கம்பனிகள் அல்லது பெருந்தோட்ட மனித அபிவிருத்திப் பொறுப்பு போன்ற இடைத்தரகர்களைப் பயன்படுத்தாமல் அரச பொறிமுறைகள் நேரடியாகச் செயற்படவேண்டும்.

அத்தோடு அரசினால் அறிவிக்கப்படும் நிவாரணத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மலையகப் பெருந்தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தகுதிகாண் அளவுகோல்கள் மற்றும் அத்தாட்சிப்படுத்தல்களில் நெகிழ்வுத்தன்மை இன்றியமையாததாகும்.

நிறைவாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில், இதுபற்றிய கரிசனையுடைய சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணிஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!