இலங்கையுடனான நீண்டகால ஒத்துழைப்பை ஆசிய வளர்ச்சி வங்கி மீண்டும் உறுதிப்படுத்துகிறது

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் (Shannon Cowlin) தெரிவித்தார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், நேற்று (12-02-2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பணிப்பாளரை ஜனாதிபதியிடம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு செயல்முறையின் வினைத்திறன் குறித்து தூதுக்குழுவினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இச்சகலந்துரையாடலில் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

மத்திய மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளில் நிலவும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கிய ஜனாதிபதி, அந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மீளமைக்கவும், நீர் மூலங்களைப் பாதுகாக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவது தொடர்பான அவசரத் தேவையை வலியுறுத்தினார். இச்சவால்களை எதிர்கொள்ள நீண்டகால வேலைத்திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள், எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடான ஆதரவு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இதன் மூலம் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான பரஸ்பர அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா (Sona Shrestha), உள்நாட்டுக்கான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சான்யன் (Lilia Aleksanyan) மற்றும் பிரதம பொருளாதார அதிகாரி லக்ஷினி பெர்னாண்டோ ஆகியோரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி. அபொன்சு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!