சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இறுதியானதொரு சம்பவமாக இது இருத்தல் வேண்டும். இவ்வாறான சம்பவம் இனியொரு போதும் இடம்பெற கூடாது.
அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு நீதி கோரி நேற்று சட்டத்தரணிகள் நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரை பேரணியாக சென்றனர். இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் தோற்றம் பெற்றுள்ள படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் சட்டத்தரணிகள் சமூகத்தினர் நேற்று நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தி நான்கு தீர்மானங்களை ஏகமனதாக எடுத்தோம். இராணுவ தலைமையகத்தை அண்மித்த பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், புத்திக மல்லவராச்சி படுகொலைக்கு நீதி கோரியும் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் கடமைகளில் இருந்து நேற்றுவிலகினோம். வடக்கு,கிழக்கு உட்பட சகல மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தது.
இவ்வாறான படுகொலைகள் இனிவரும் காலங்களில் இடம்பெற கூடாது என்பதற்காகவே இந்த ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவாட்சியை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையானது இறுதியானதொரு சம்பவமாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சம்பவம் இனியொரு போதும் இடம்பெற கூடாது. அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும்.
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நீதிபதிகள், சட்டத்தரணிகள் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பொதுமக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.