பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில், இந்தியா – இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் – இந்தியா இடையே நீண்ட கால நட்புறவு உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக, 25ம் தேதி இஸ்ரேல் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, பிராந்திய மற்றும் இருதரப்பு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேச உள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கிறார்.
இந்த பயணத்தை ஒட்டி இஸ்ரேலில் நடந்த நிகழ்ச்சியில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவம் சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேல் ராணுவ அமைச்சகத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு இயக்குநரகம், இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகம் இணைந்து, இரு நாட்டு ராணுவ நிறுவனங்கள் இடையே கருத்தரங்கு மற்றும் நேரடி சந்திப்புகளை சமீபத்தில் நடத்தின.
இஸ்ரேல் மற்றும் இந்திய ராணுவத்தில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் ராணுவ தொழில்துறை அமைப்பு மற்றும் ராணுவ கொள்முதல் நடைமுறை குறித்து பரஸ்பரம் அறிந்துகொள்ள செய்வதே இந்த நிகழ்வின் நோக்கம்.
இந்த நிகழ்வில், 30 இந்திய மற்றும் 26 இஸ்ரேல் ராணுவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், நெருக்கடியான காலங்களில் தோள் கொடுத்து துணைநின்ற இரு ராணுவ தொழில்துறைகள் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கிடையே துறை சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.