வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வரும்போது இரண்டு கிலோ கஞ்சாவை தங்களுடன் கொண்டு வருவதாக அமைச்சர் அன்பரசன் கூறியுள்ளார்.

‘தமிழகம் தலைகுனியாது’ என்ற தலைப்பில், சென்னை நங்கநல்லுாரில், திமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு தினந்தோறும் 10,000த்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்கள், தமிழகம் வரும்போது, கையில் தலா இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது போல் கஞ்சா பழக்கம் வந்திருக்காது.

தற்போது, திமுக அரசு போதைப்பொருளை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கஞ்சாவிற்கு தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் கஞ்சாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது: இரு மொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான், வெளிநாடுகளில் உள்ள பல உயர் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். ஆனால், ஹிந்தி படித்த பெரும்பாலானோர் கஞ்சாவும், பானிப்பூரியும் விற்கின்றனர்.

மத்திய பாஜ, அரசு, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வஞ்சனை செய்துள்ளது. அவர்கள், வயிற்றில் ஈர துணியை போட்டு அனுப்பினர். வரும் தேர்தலில், நாம் அவர்கள் தலையில் முக்காடு போட்டு அனுப்ப வேண்டும்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தகுதியே இல்லை. அவர் ஆட்சியில் தான், துாத்துக்குடி துப்பாக்கி சூடு, கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் என அரங்கேறின. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தமிழக அரசியலில் மாற்றத்தை விதைக்கும் தமிழ் தேசியம்: ஒரு வரலாற்றுப் பார்வை

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்!

த.வெ.க. வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக முன்னாள் அரசு அதிகாரிகளை தன்னார்வலர்களாக நியமிக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்.