Colombo - கொழும்பு இலங்கை இலங்கையின் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 831 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது! Amizhthu22 February 202605 views ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று சனிக்கிழமை (21-02-2025) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 831 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 12 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 835 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 02 பேர் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 403 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 213 கிராம் ஐஸ், 25 கிலோகிராம் 968 கிராம் கஞ்சா, 60,584 கஞ்சா செடிகள், 700 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 33 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 98 போதை மாத்திரைகள், 294 கிராம் 280 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 01 கிலோகிராம் 837 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.