ஈரானின் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ஜியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவின் சிக்கபல்லாபூர், அலிப்பூர் கிராமத்தில், ஜியா பிரிவு முஸ்லிம்கள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து, அவர்கள் பேரணி சென்றதால் பதற்றம் நிலவியது.

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக, ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதலில், அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். கமேனியின் கொலை, ஜியா பிரிவு முஸ்லிம்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகா, அலிப்பூர் கிராமத்தில், 30,000 மக்கள் வசிக்கின்றனர். இதில், 25,000 பேர் ஜியா பிரிவு முஸ்லிம்கள். அலிப்பூர் கிராமம், மினி ஈரான் என்றே அழைக்கப்படுகிறது.

தங்கள் மதகுரு கொல்லப்பட்டதால், ஜியா பிரிவு முஸ்லிம் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடைகளை அணிந்து, நகரில் பேரணி சென்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

‘அஞ்சுமான் இ ஜபாரியா’ என்ற அமைப்பின் சார்பில், அலிப்பூர் கிராமத்தில் உள்ள மசூதியில், கமேனிக்காக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற முஸ்லிம்கள், கமேனியை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அவர்கள் கூறியதாவது: எங்கள் மதகுருவான கமேனி, 1986ம் ஆண்டு அலிப்பூர் கிராமத்திற்கு வந்தார். ஈரானுக்கும், அலிப்பூருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்கள் கிராமத்தை சேர்ந்த, 150 முதல் 200 பேர் தற்போது ஈரானில் உள்ளனர். தொழில் செய்கின்றனர்; மாணவர்களும் உள்ளனர். அவர்கள் பத்திரமாக திரும்பி வர பிரார்த்தனை செய்கிறோம்.

எங்கள் கிராமத்தில் கமேனி பெயரில் மருத்துவமனை உள்ளது. அவரது கொள்கையை பின்பற்ற, இங்கு பெரிய கூட்டமே உள்ளது. ஈரானின் மத விதிகள் எங்கள் கிராமத்திலும் பின்பற்றப்படுகின்றன. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். அவரது மரணத்தை ஒட்டி, கிராமத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அலிப்பூரில் பதற்றம் நிலவுவதால், கிராமம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எஸ்.பி., குஷால் சவுக் ஷி அங்கு சென்று நிலைமையை கண்காணித்தார்.

Related posts

தேசிய வானிலை அறிக்கை – இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.