சென்னையில் இருந்து டில்லி சென்ற ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில், நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திருவள்ளுர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து, கடந்த மாதம் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், டில்லிக்கு புறப்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த இரண்டு ஆண் பயணியர், மது போதையில் விமான பணிப்பெண்ணிடம் பிரச்னை செய்துள்ளனர்.
அதோடு, இருக்கையில் அமராமல், எழுந்து நின்று, விமான பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்து, அவதுாறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பணியின் நிமித்தமாக அந்த இருவர் இருந்த பகுதிக்கு வந்த பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.
இந்நிலையில், மறுநாள், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் டில்லியில் இருந்து சென்னை திரும்பி வந்ததும், மீனம்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், விமானத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, விமான பணிப்பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து, மீனம்பாக்கம் மகளிர் போலீசார், அந்த இருவரும் விமானத்தில் அமர்ந்திருந்த இருக்கைகளை வைத்து, அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர். அதில், திருவள்ளூர், முகமது அலி தெருவை சேர்ந்த பிரபாகரன், 36, என்பதும், திருவள்ளுர் நகராட்சி, 6வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் என்பதும் தெரியவந்தது.
மற்றொருவர் திருவள்ளூர், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தியாகு, 36, என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், 26ம் தேதி, மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, இருவருக்கும் சம்மன் அனுப்பினர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, டில்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், தியாகு இருவரும், சென்னை வந்து இறங்கினர். அப்போது, தயார் நிலையில் இருந்த மீனம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
எந்த பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல்
”சில தினங்களுக்கு முன், தி.மு.க., நிர்வாகியின் பாலியல் இச்சைக்கு இரு வயது மழலை பலியான பெருந்துயரத்தின் சுவடு மறையும் முன், சென்னையில் இருந்து டில்லி சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில் இருந்த பணிப்பெண்ணிடம், தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களை வெறும் சதை பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் ஒரு கேவலமான மனநிலை, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தமிழக பெண்களுக்கு மட்டுமின்றி, நாட்டில் உள்ள எந்த பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கி கொண்டிருக்கும் உடன்பிறப்புகளை, ஸ்டாலின் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
– நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,