“வாட்ஸ்அப்” உரையாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து வழங்க முடியாது – மும்பை உயர் நீதிமன்றம்.

“குடும்ப தகராறில், ‘வாட்ஸ்அப்’ உரையாடலை மட்டும் முக்கிய ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியாது. மேலும், அந்த ஆதாரத்தை எதிர்த்து மனைவி வாதிட அனுமதிக்க வேண்டும்” என்று மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இந்த வழக்கில், கணவரை வசைபாடி, ‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியில், மனைவி குறுஞ்செய்தி அனுப்பிய ஆதாரங்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த உரையாடலில், ‘நாசிக்கில் இருந்து புனேவுக்கு இடம்பெயர்ந்து தனிக்குடித்தனம் நடத்த வேண்டும்’ என, மனைவி கோரியிருந்தார். மேலும், தன் மாமியார் மற்றும் நாத்தனாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த ஆதாரத்தை ஆராய்ந்த குடும்ப நல நீதிமன்றம், ‘உணர்வு ரீதியாக கணவருக்கு மன அழுத்தம் கொடுத்து, மனைவி கொடுமைப்படுத்தியுள்ளார்.

‘எனவே, மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்க இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது’ என, தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் தரப்பு வாதத்தை கேட்காமல், ஒருதலைபட்சமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் பாரதி டாங்கரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கணவர் தரப்பில், ‘வாட்ஸாப்’ உரையாடல்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. அதை எதிர்த்து மனைவி தரப்பில் வாதங்களை வைக்கவோ, ஆதாரங்களை சமர்ப்பிக்கவோ வாய்ப்பு தரப்படவில்லை.

எனவே, இவ்வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை ரத்து செய்கிறோம். அத்துடன் வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இரு தரப்பினரும் சமரச வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வது குறித்தும் பரிசீலிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

தீவிர ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த நியூசிலாந்து – 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கேமரா சீனாவில் வாங்கப்பட்டது – NIA

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்ஸ் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.