29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதி செய்கிறது.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, இஸ்ரேலில் உள்ள 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நலன் குறித்துப் பேசியதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல் புதன்கிழமை (04-03-2026) அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 மைல் தொலைவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கையிலும் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியிருக்கும் பின்னணியில், வெளிநாடுகளில், குறிப்பாக மோதல் நிலவும் நாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சாருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, இஸ்ரேலில் உள்ள 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நலன் குறித்துப் பேசியதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக பிராந்திய அமைதி உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக அமைச்சர் விஜித்த ஹேரத் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

சர்வதேச கடல் எல்லைகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.