இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பையும், வலய நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு வலய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஈரானிய கப்பலை அண்மித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 87 சடலங்களை குளிரூட்டப்பட்ட இரண்டு கொள்கலன்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலைமையை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்தரப்பிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05-03-2026) நடைபெற்ற அமர்வின் போது ஈரான் கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய கிழக்கு வலயத்தில் தற்போது மிகவும் பதற்றமான நிலைமை காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்திலும், வெளியிலும் இருந்துக் கொண்டு போலியான விடயங்களையோ அல்லது திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களையும் குறிப்பிட்டு ஒரு சமூகத்தினரை ஆத்திரப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதையும் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அந்தக் கடற்பரப்பில் மனித உடல்கள் மிதப்பதாகவும் நேற்று (நேற்று முன்தினம்) இலங்கை கடற்படைக்கும், சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபைக்கும் தகவல் கிடைக்கப்பெற்றன. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விரைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு இலங்கை கடற்படைக்கு உண்டு.
கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் அந்த கடற்பரப்புக்கு சென்று விரைவான மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அந்த கப்பலில் இருந்து முதற்கட்டமாக 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இலங்கை விளையாட்டு
87 பேரின் சடலங்கள் காலி கராபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் அரச வைத்தியசாலைகளில் இல்லை. ஆகவே தனியார் தரப்பிடமிருந்து குளிரூட்டப்பட்ட இரண்டு கொள்கலன்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் வலய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். மீட்கப்பட்ட ஈரானியர்களின் விவகாரத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.