டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

by
0 comments

‘டி-20’ உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது. நேற்று (மார்ச் 8) நடந்த பைனலில் நியூசிலாந்தை 96 ரன் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடந்தது. நேற்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்கிக்கு பதிலாக ஜேக்கப் டபி இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு சாம்சன், அபிஷேக் சர்மா ‘சரவெடி’ துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 43 பந்தில் 98 ரன் சேர்த்தனர். மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து, ரன் கணக்கை சாம்சன் துவக்கினார். இதற்கு பின் ஒரே ரன் மழை தான். ஜேக்கப் டபி ஓவரில் அபிஷேக் 2 பவுண்டரி, சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். பெர்குசன் ஓவரில் அபிஷேக் (4,6), சாம்சன் (6,4) விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன. டபி வீசிய அடுத்த ஓவரில் அடித்து நொறுக்கிய ‘பஞ்சாப் சிங்கம்’ அபிஷேக் (4,6,4,4), 18 பந்தில் அரைசதம் எட்டினார். ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா 92/0 ரன் குவித்தது. ரச்சின் ரவிந்திரா ‘சுழலில்’ அபிஷேக் (52, 6×4, 3×6) சிக்கினார். 7.2 ஓவரில் இந்தியா 100/1 ரன்னை எட்டியது. ‘சேட்டன்’ சாம்சன், 33 பந்தில் தொடர்ந்து 3வது அரைசதம் எட்டினார்.

பெர்குசன் ஓவரில் (12வது) சாம்சன் (6,6,4), இஷான் கிஷான் (6) வெளுத்து வாங்க, 24 ரன் கிடைத்தன. தொடர்ந்து ரச்சின் ஓவரில் (14) சாம்சன் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடிக்க, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இஷான், 23 பந்தில் அரைசதம் எட்டினார். இந்த சமயத்தில் 16வது ஓவரை வீசிய நீஷம் ‘ஷாக்’ கொடுத்தார். முதல் பந்தில் சாம்சன் (89, 5×4, 8×6) அவுட்டானார். 5வது பந்தில் இஷான் (54, 4×4, 4×6) பெவிலியன் திரும்பினார். 6வது பந்தை கேப்டன் சூர்யகுமார் (0) துாக்கி அடிக்க, எல்லையில் ரச்சின் கலக்கலாக பிடித்தார். இந்த ஓவரில் 3 விக்கெட் சரிந்தன. 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்தியா 16 ஓவரில் 204/4 என்ற நிலையை எட்டியது. ஹர்திக் பாண்ட்யா, 18 ரன் எடுத்தார். நீஷம் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே (4,6,6,4,4) 24 ரன் விளாசி, கச்சிதமாக ‘பினிஷிங்’ செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. துபே (26), திலக் வர்மா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

banner

கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட் நல்ல துவக்கம் தந்தார். இவரது விளாசல் கைகொடுக்க, ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டன. அக்சர் படேல் ‘சுழலில்’ ஆபத்தான ஆலன் (9) அவுட்டானார். பும்ராவின் முதல் பந்திலேயே ரச்சின் ரவிந்திரா (1) நடையை கட்டினார். இதற்கு பின் விக்கெட்டுகள விரைவாக சரிந்தன. அக்சர் பந்தில் கிளன் பிலிப்ஸ் (5) போல்டானார். சாப்மென் (3) நிலைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி வலையில் செய்பர்ட் (52) வீழ்ந்தார். அக்சர் படேல் பந்தில் டேரில் மிட்சல் (17) அவுட்டாக, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது.

பும்ரா ‘வேகத்தில்’ நீஷம் (8), மாட் ஹென்றி (0) வரிசையாக அவுட்டாகினர். அடுத்து வந்த பெர்குசன் ஒரு ரன் எடுக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. பும்ரா பந்தில் கேப்டன் சான்ட்னர் (43) நடையை கட்டினார். நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ‘நடப்பு சாம்பியனாக’ களமிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை கைப்பற்றி அசத்தியது. இந்தியா சார்பில் பும்ரா 4, அக்சர் படேல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பவுலிங்கில் அசத்திய பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருதும், சூப்பர் 8, செமி பைனல் மற்றும் பைனலில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி, இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.


முதன் முறை

‘டி-20’ உலக கோப்பை பைனலில் முதல் விக்கெட்டுக்கு, முதன் முறையாக 50 ரன்னுக்கும் மேல் எடுத்த அணியானது இந்தியா (7.1 ஓவர், 98 ரன்). முன்னதாக 2009 பைனலில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 48 ரன் (லார்ட்ஸ்) எடுத்தது.


‘பவர் பிளேயில்’ அதிகம்

‘டி-20’ உலக கோப்பை ‘பவர் பிளே’ ஓவர்களில் (முதல் 6) அதிக ரன் எடுத்த அணி வரிசையில் முதலிடத்தை இந்தியா (92/0), வெஸ்ட் இண்டீசுடன் (92/1 ரன், எதிர்-ஆப்கன், 2024) பகிர்ந்து கொண்டது.


127/1 ரன்

‘டி-20’ உலக கோப்பையில் முதல் 10 ஓவரில் அதிக ரன் எடுத்த அணி வரிசையில் இந்தியா (127/1) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நெதர்லாந்து (132/3, எதிர்-அயர்லாந்து, 2014) உள்ளது.


7 முறை

சர்வதேச ‘டி-20’ அரங்கில், அதிக முறை ஒரு இன்னிங்சில் 250க்கும் குவித்த அணி வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இந்தியா (7 முறை). அடுத்த இடத்தில் ஐதராபாத் (5), வெஸ்ட் இண்டீஸ் (3), ஜிம்பாப்வே (3), சர்ரே (3) அணிகள் உள்ளன.


அதிவேக 100 ரன்

‘டி-20’ உலக கோப்பை ‘நாக்-அவுட்’ போட்டியில் அதிவேகமாக 100 ரன் எடுத்த முதல் அணி என சாதனை படைத்தது இந்தியா (7.2 ஓவர், 2026, பைனல்). இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து (7.5 ஓவர், எதிர், தென் ஆப்ரிக்கா, 2026, கோல்கட்டா) உள்ளது.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00