அனைத்துலக மகளிர்நாள் மார்ச் 8 இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மகளிர் அமைப்பு சர்வதேசப் பெண்கள் நாளினைச் சிறப்பித்து ஜெனோவா மாநகரில் தமிழர் இல்லத்தில் (08/03/2026) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பல்லின மக்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் பெண் மாவீரரான 2லெப் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரேற்றப்பட்டு அகவணக்கத்துடன் எழுச்சிகரமாக நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
திலீபன் கலைக்கூட மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து சர்வதேச மகளிர் நாள் பற்றிய சிற்றுரையுடன் மதிய உணவு விருந்தோம்பல் பரிமாறப்பட்டது. உண்டுகளித்து மகிழ்ந்த நிலையில் மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழைந்து வண்ணம் சின்னஞ்சிறு சிறார்களின் நடனம் மற்றும் பல்லின மக்களின் நடனம் இடம்பெற்றது .இந் நிகழ்வினைத் தொடர்ந்து இத்தாலி மேற்பிராந்திய மகளிர் அமைப்பினால் உருவாக்கப் பெற்ற ‘புது யுகத்தின் வெளிச்சம்’ என்ற மகளிர்நாள் பாடல் திரு. நீலன் அவர்களின் பின்னணி இசையமைப்புடன் வெளியிடப்பட்டது.
அழகான வரிகளைத் தாங்கிய இப்பாடல் உலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் சமர்ப்பணமாகிய நிலையில் முன்னாள் மகளிர் அமைப்பு உறுப்பினரான திருமதி இந்திராதேவி இராசநாயகம் அவர்களை பெருமைப்படுத்தி வரவேற்றுக் கொண்டு கதம்பநடனம்,கவிதை,சங்ககாலம் முதல் சமகாலம் வரை வரலாறு படைத்த வீரப்பெண்களின் சாதனைகள் எனப் பல நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழீழப் பெண்களும் எழுச்சியும் என்ற விடயத்தினை விளக்கக் காட்சியுடன் அறிக்கையும் Donne Eelam Tamil என்ற பெண்களின் விழிப்புணர்ச்சி சமூக வலையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந் செயல்வடிவத்தைத் தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது குடும்பமா?சமூகமா? என இரண்டு அணிகளாக விவாத அரங்கம் நடைபெற்று அரங்கம் அதிர கருத்துக்களால் களமாடப்பட்டு தடையாக இருப்பது சமூகம் தான் என்ற அணியே வெற்றி பெற்றது. மகளிர் அமைப்பினரால் இனிதே நிகழ்வுகள் நடைபெற்று நிறைவேறியது .






