இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர்!

இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் வெறும் தோட்டத் தொழிலாளர் சமூகமாகச் சுருக்கப்படாமல், அவர்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று வியாழக்கிழமை (11-03-2026) நடைபெற்றது.

இதன்போது ஜப்பானிய தூதுக்குழுவினரின் சிறப்பான வரவேற்பிற்கு நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த மனோ கணேசன், இந்நாட்டில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாக மிக அதிகளவில் உதவி வரும் ஒரு நட்பு நாடாக ஜப்பான் திகழ்கிறது. அந்த உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை ஜப்பான் அரசு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசு இனி வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தோட்டங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் வகையிலான திட்டங்களைத் தீர்மானித்துச் செயற்படுத்துமாறு நாம் கோருகிறோம்.

எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாளங்காணுங்கள். நாம் இங்கே பல்வேறு துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இன்றைய அரசாங்கம் பல விடயங்களைப் பேசுகிறது, ஆனால் அவை இன்னும் செயல் வடிவம் பெறவில்லை. ஆகவே, ஜப்பான் தமது உதவிகள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.இலங்கை சுற்றுலா

கூட்டணித் தலைவர் மனோ கணேசனுடன், முன்னாள் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, மலையகத் தமிழ் மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளம் மற்றும் அவர்களின் சமகாலப் பிரச்சினைகளை ஜப்பானிய தூதுவரிடம் முன்வைத்த இச்சந்திப்பு, அச் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

Related posts

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்.

“காயங்களுக்கு அப்பால்” காபி டேபிள் புத்தக வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி.

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு–வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 64‑ஐ கடந்தது