Sunday | 22 March 2026

ஈகைப்பெருநாளாம் இரம்ஜான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் எனதருமை இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

0 comments

X இல் அவரது அறிக்கை

மார்க்கத்தின் வழியாக மனிதத்தை வாழ்விக்க மகத்தான நன்னெறியினை மொழிந்த இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள், “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என்கிறார்.

மேலும், தம்முடைய அருள்மொழியில், “தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது; இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம். பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்” என்றும் கூறுகிறார். “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்றும் தம்முடைய இறுதிப் பேருரையில் குறிப்பிடுகிறார்.

போற்றுதலுக்குரிய நபி பெருமானார் காட்டிய அத்தகைய அன்புவழி நின்று, அறநெறி பற்றி, ஐந்து முதன்மைக் கடமைகளில் ஒன்றாக, புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி உணவும், நீரும் துறந்து, உடலையும், உள்ளத்தையும் பண்படுத்தி, 30 நாட்கள் நோற்ற நோன்பு முழுமைபெறும் திருநாளாம், ‘இரம்ஜான் பெருநாளை’ பெருமகிழ்வோடு கொண்டாடும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் நிறையட்டும்; உங்களின் உளப்பூர்வமான நோன்பினையும், வழிபாட்டையும், வணக்கத்தையும் நற்கொடையையும், நற்செயல்களையும் இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும். இப்புனித நாள் உங்கள் இதயத்தில் அமைதியையும், வாழ்வில் மகிழ்ச்சியையும், குடும்பத்தில் அன்பையும் கொண்டுவரட்டும்.

இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான, ஈகைப்பெருநாளைக் கொண்டாடும் இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00