ஜி.டி. நாயுடு மேம்பாலத் திறப்பு விழாவிற்கு ரூ. 2 கோடி செலவிடப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறையால், கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் 10.1 கி.மீ., மேம்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, ஜி.டி.நாயுடு பெயர் சூட்டினார். முதலில், ரூ.1,621 கோடி ஒதுக்கப்பட்டது.

2024ல் ரூ.1,791 கோடிக்கு திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ரூ.170 கோடி மதிப்பீடு உயர்ந்தது. இதற்கான காரணம் கேட்டபோது, அ.தி.மு.க., ஆட்சியில் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என கூறப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப அனுமதி, வரைபட அனுமதி பெற்றதன் அடிப்படையில், பாதசாரிகள் ரோட்டை கடக்க, 5 இடங்களில் சுரங்கப்பாதை அமைத்திருக்க வேண்டும். மெட்ரோ ரயிலை காரணம் காட்டி, அச்சேவையை நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்தது. அதற்கான, 50 கோடி ரூபாய் மீதமாகியிருக்க வேண்டும்.

மாறாக, செலவினம் உயர்ந்திருக்கிறது. தற்போது பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர். அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது; சிலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு நெடுஞ்சாலைத்துறை போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாததே காரணம்.

இச்சூழலில், மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பீளமேடு வரதராஜா மில் அருகே ஏறுதளம் உள்ளது. மூனே முக்கால் மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் ரோடு போட வேண்டும். வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு குறுகலாக உள்ளது. டிரான்ஸ்பார்மர், இ.பி., ரோட்டில் இடையூறாக உள்ளன. இவற்றை தள்ளி நட்டியிருக்க வேண்டும்.

இப்பகுதியில், 4.5 அடிக்கு நிலம் கையகப்படுத்த, மஞ்சள் நிற பெயிண்டால் குறியீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், போதிய நிலம் கையகப்படுத்தாமல், தனியாருக்கு சாதகமாக நெடுஞ்சாலைத்துறையினர் நடந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இழப்பீடு தொகை பெற்றவரிடம் நிலம் கையகப்படுத்தாமல், மழை நீர் வடிகாலை வளைத்து கட்டியதால், இப்பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இனி, அவ்விடத்தில் நிலம் கையகப்படுத்தி, நடைபாதை அமைப்பது பொதுமக்களுக்கு பயன் தராது; நில உரிமையாளருக்கே உபயோகமாக இருக்கும்.

நிலம் கையகப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறையில் டி.ஆர்.ஓ., தலைமையில் தனி பிரிவு செயல்படுகிறது. அக்குழு என்ன செய்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இப்பகுதியில் எத்தனை அடிக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும்; இதுவரை எத்தனை அடி கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இச்சூழலில், மேம்பாலம் திறப்பு விழா மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு ரூ.2 கோடி ஒதுக்கிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திறப்பு விழாவின்போது மேம்பாலத்தில் சீரியல் விளக்குகள் ஒளிர விடப்பட்டன. டிரோன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. கோல்டுவின்ஸ் பகுதியில் சிறிய மேடை அமைத்து, ரிப்பன் வெட்டி, முதல்வர் திறந்து வைத்தார். வாழை தோரணம் அமைக்கப்பட்டது. இதற்கு 2 கோடி ரூபாய் செலவாகுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!