ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கே.டி. ராமராவ் மற்றும் பிறருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தெலுங்கானாவில், ‘பார்முலா – இ’ கார் பந்தயம் நடத்த, அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த ஊழல் புகாரில், பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் உட்பட பலர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முந்தைய பி.ஆர்.எஸ்., ஆட்சியில், 2024ல் தலைநகர் ஹைதராபாதில், ‘பார்முலா – இ’ கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் இருந்து 55 கோடி ரூபாய், வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து, அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், பி.ஆர்.எஸ்., தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் மகனுமான கே.டி.ராமா ராவ், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அரவிந்த் குமார், ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைமை இன்ஜினியர் பி.எல்.என்.ரெட்டி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், முதல் குற்றவாளியாக ராமா ராவ் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது.

Related posts

உலக காற்றுத் தர அறிக்கையில் இந்திய நகரம் உலகின் மிக அதிக மாசடைந்த நகரமாகத் தெரிவிப்பு

இந்திய ஆயுதப் படைகளில் பெண் அதிகாரிகளின் தகுதிகளை மதிப்பிடும் முறை பாகுபாடு மிக்கதாக உள்ளது!

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லியிலிருந்து பெங்களூருக்குக் கடத்தப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்