புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: த.மா.கா., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருடன் பேச்சு நடக்கிறது. தொகுதி பங்கீடு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும்.
இனி, புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை. புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. அவர் கேட்பதும் நாங்கள் சொல்வதும் சரிப்பட்டு வரவில்லை. அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, மயிலாப்பூர் தொகுதி தான் பக்கமாக உள்ளது. அதனால், அங்கிருந்து பிரசாரத்தை துவக்குகிறேன். தி.மு.க., ஆட்சியில், செய்தியாளர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது.
சசிகலா, ராமதாஸ் அமைத்திருக்கும் கூட்டணியால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் வி.சி., தலைவர் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேதனையில் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் உணர்வுபூர்வமாக கூட்டணியில் உள்ளோம். கடந்த முறையை விட, நாங்கள் குறைவான இடங்களில் போட்டியிடுவது பின்னடைவு இல்லை.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் போட்டியிட முடியும். இதில் அதிகம், குறைவு என்ற பேச்சு இல்லை. தி.மு.க.,வே குறைவான இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில் நாங்கள் தான் வேகமாக செயல்படுகிறோம்.