இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!

தற்போதைய அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதோடு, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க கையாண்ட செயன்முறை ரீதியான உத்திகளைப் பின்பற்றத் தெரியாமல் திணறி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (25-03-2026) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது இருந்த பாரிய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைச் செயன்முறை ரீதியாக நிரூபித்துக் காட்டினார். அன்று மேடைகளில் நின்று அவரை விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கொண்டுவந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார். ரணில் விக்கிரமசிங்க செலுத்திய அதே வாகனத்தையே இவர்களும் செலுத்துகின்றனர். எனினும் முழுமையாக எரிபொருள் நிரப்பத் தெரியாமல் அரைவாசிப் பெட்ரோலுடன் தட்டுத்தடுமாறி ஓட்டுகின்றனர்.

அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க ஆரம்பத்தில் பழைய ஊழல்களைக் கிளறியது. அது எடுபடாமல் போனதும், போரை காண்பித்து பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறது. கோவிட் மற்றும் ஏனைய நெருக்கடிகளின் போது வரிச் சுமையைக் குறைத்து நிவாரணம் வழங்குவோம்’என தெரிவித்த அநுரகுமார, இன்று வரலாற்றில் இல்லாதவாறு வரிகளை விதித்துள்ளார். ஏப்ரல் 8 ஆம் திகதி வரை டீசல் இருப்பதாகவும், ஏப்ரல் 2 ஆம் திகதி வரை பெட்ரோல் இருப்பதாகவும் ஜனாதிபதி சபையில் கூறினார். எனினும் இரண்டே நாட்களில் எரிபொருள் விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்தியுள்ளனர்.

அத்தோடு பெட்ரோலுக்கு 119 ரூபாவும், டீசலுக்கு 93 ரூபாவும் வரி அறவிடப்படுகிறது. இந்த வரிப்பணத்தை அரசாங்கம் தற்காலிகமாகக் குறைத்திருந்தால், எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். அரசாங்கத்துக்கு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. திறைசேரியை நிரப்புவதற்கே ஆர்வமாக உள்ளது. எரிபொருள் வரிசைகளை ஒழிக்க ரணில் விக்கிரமசிங்கவும் காஞ்சன விஜேசேகரவும் கொண்டு வந்த கிவ்.ஆர் குறியீட்டு முறையை தற்போதைய அரசாங்கத்தால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை.

நாட்டில் உள்ள 15ஆயிரம் பேருந்துகளில் குறைந்தது 8 ஆயிரம் பேருந்துகளுக்காவது முறையான கிவ்ஆர் குறியீடுகள் வழங்கப்படவில்லை. எமது வெளிநாட்டுக் கொள்கை இன்று சர்வதேச அளவில் நகைப்புக்குறியதாக மாறியுள்ளது. ஆங்கிலம் தெரியாத வெளிவிவகார அமைச்சர்கள் சர்வதேச நாடுகளுக்குச் சென்று இலங்கையின் தரம்தாழ்திவருகின்றனர். தனிப்பட்ட பழிவாங்கல், அரசியல் மேடைப் பேச்சுக்களால் ஒருபோதும் நெருக்கடிகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதைய அரசாங்கம் தனது அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று இந்த நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது என்ற ஆலோசனையைப் பெற வேண்டும் என்றார்.

Related posts

ரஷ்யா மூலம் ஏமாற்றப்பட்ட ஆட்சேர்ப்பில் சிக்கிய 15 ஜிம்பாப்வே குடிமக்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக அரசு உறுதி

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.