இலங்கையில், வடக்கு நோக்கிய ரயில் சேவைகள் நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கும் – ரயில்வே திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களம்

வடக்கு பாதை புனரமைப்புமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (09.04.2026) முதல் வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் கடுகதி புகையிரதம் மற்றும் யாழ் இரவு தபால் புகையிரதம் எதிர்வரும் வியாழக்கிழமை முதலும், யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.04.2026) முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘தித்வா’ புயல் தாக்கத்தால் வடக்கு புகையிரத பாதையில் 14 பிரதான பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளை தற்காலிகமாக புனரமைத்து 2025.12.24 ஆம் திகதி கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை குறைந்த அளவிலான வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக 2026.01.19 ஆம் திகதியன்று வடக்கு புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்பட்டதுடன்,புனரமைப்பு பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 05 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இடங்களை புனரமைத்ததன் பின்னர் மஹவ- ஓமந்தை வீதி புனரமைப்புக்குரிய இடங்களில் அமைக்கப்பட வேண்டிய 05 பாலங்கள் மற்றும் காசி கோட்டை யானை சுரங்க பாதை உள்ளிட்ட புனரமைப்புமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (09) முதல் வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் கடுகதி புகையிரதம் மற்றும் யாழ் இரவு தபால் புகையிரதம் எதிர்வரும் வியாழக்கிழமை முதலும், யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும்.

எதிர்வரும் வியாழக்கிழமை காலை 05.15 மணிக்கு கல்சிசை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ் கடுகதி புகையிரதம் அன்றைய தினம் பகல் 12.15 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்,அன்றைய தினம் பகல் 01.50 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படும்.

அதேபோல் அன்றைய தினம் மாலை 06.55 மணிக்கு மொறட்டுவ புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ். இரவு தபால் புகையிரதம் மறுநாள் அதிகாலை 04.25 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். அன்றைய தினம் காலை 08 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) காலை 06.40 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ்.தேவி புகையிரதம் அன்றைய தினம் பகல் 02.35 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். மறுநாள் (11) காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்படும்.

இந்த புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுக்களை https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளம் முற்பதிவு செய்துக் கொள்ள முடியும்.

Related posts

ரஷ்யாவின் தொழில்நுட்ப மறுமலர்ச்சி: IL-96-400M, செயற்கைக்கோள்கள் மற்றும் உள்நாட்டு மைக்ரோசிப்கள்

நீரிணையில் எரியும் நெருப்பு: எரிசக்தியும் போருமான உலகத்தின் விளிம்பு நிலை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.