இலங்கையில் எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்

இலங்கையில் எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட 324 பேர் ஜனாதிபதிக்கு கூட்டறிக்கை எழுதியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மதத்தலைவர்கள் உள்ளடங்கலாக 324 பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய இதுகுறித்து எஸ்.ராஜேஸ்வரி, இ.மாதவராஜா, எஸ்.கதிர்காமத்தம்பி ஆகியோர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஐவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய ஒன்றியம், இனக்கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், கிழக்கு சிவில் செயற்பாட்டாளர்கள் பேரவை, சமூக அபிவிருத்தி நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இளைஞர் உரிமைகள் கூட்டிணைவு என்பன உள்ளடங்கலாக 41 சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டு ஆசியர் சேவை சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், கூட்டு ரயில்வே ஊழியர் சங்கம், கூட்டு தாதியர் சேவை சங்கம் என்பன உள்ளடங்கலாக 23 தொழிற்சங்கங்களும் சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், கலாநிதி திருநாவுக்கரசு பாலமுருகன், செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ, சட்டத்தரணி நிமந்தி பெர்னாண்டோ, ஊடகவியலாளர் செல்வராஜா ராஜசேகர் ஆகியோர் உள்ளடங்கலாக 225 தனிநபர்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீண்டகாலமாக நிலவும் ஒரு பிரச்சினையாகும். அரசியல் விமர்சகர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டு, அவசரகாலச்சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்படும் போக்கு தொடர்கிறது. இலங்கை செய்திகள்

1970 மற்றும் 1980களில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன எழுச்சி, சுமார் 30 வருடகாலம் நீடித்த ஆயுதமோதல் என்பவற்றில் ஆரம்பித்து, சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகமும், 2022இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து எழுச்சியடைந்த ‘அரகலய’ போராட்ட செயற்பாட்டாளர்களும் இலக்குவைக்கப்பட்டமையானது அரசு தமது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு பயங்கரவாதச் சட்டங்களையும் அவசரகால வழிகாட்டல்களையும் ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காண்பிக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளில் 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்ட செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இன்னமும் நடைபெற்றுவருகின்றன. அதாவது அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பதாகவே அவர்கள் தமது வாழ்வின் இரு தசாப்த காலத்தை சிறைக்கம்பிகளுக்கு மத்தியில் கழித்திருக்கிறார்கள். அவர்கள் வழக்கு விசாரணைக்காகக் காத்திருந்த காலப்பகுதியில் தமது இளமைக்காலத்தை முழுமையாக இழந்திருக்கிறார்கள். ஏனைய 8 பேரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி இக்காலப்பகுதியில் அவர்கள் பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளின் சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியின் பிரகாரமும், நல்லிணக்கத்தை முன்னிறுத்திய நடவடிக்கை என்ற அடிப்படையிலும் அந்த 10 அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட்டு, மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இடமளிக்கப்படவேண்டும் என்பதே அந்த கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கூட்டு வேண்டுகோளாக இருக்கிறது.

1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்துவரும் ஜே.வி.பி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார். எனவே கடந்த காலத்தில் அரச ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்த தற்போதைய அரசாங்கம், தமது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை சிறைச்சாலைக்குள் கழித்த, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகளையும் மேற்குறிப்பிட்டவாறு நிபந்தனையின்றி விடுவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் 10 தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டோர் உள்ளடங்கலாக பயங்கரவாத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஏனையோரின் வழக்குகள் குறித்து ஆராய்தல், குறிப்பாக சுமார் 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்ததன் பின்னரும், நீண்டகால தடுத்துவைப்பின் பின்னரும் சகல குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்குதல் மற்றும் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறுவதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதிய சட்டங்களை முன்மொழியாதிருத்தல் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தக் கூட்டுக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருந்தால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் – இலங்கை எரிசக்தி அமைச்சர்

மாத்தூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்

கள்ளபெரம்பூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்