11.05.2025 – தமிழீழம்.
வீட்டுக்கொரு பதுங்குகுழி
வெட்டி வைத்திருந்தோம்.
வானம் இரைந்தால்
விரைந்து அதனுள் குதித்தோம்.
பாம்பும் பல்லியும் எம்மோடு
சேர்ந்து அதற்குள் குடியேறும்.
மட்டைத் தேள்களும் சில
மண்ணுண்ணிப் பாம்புகளும்
நெளிந்து பயமுறுத்தும்.
குண்டுக்கு அஞ்சி நகரநகர
குழிவெட்ட இடமுமில்லை
உடலதனிலே வலிமையில்லை.
வெறும்மண்ணை அள்ளி
அப்பரின் வேட்டியிலும்
ஆத்தாளின் சேலையிலும் கட்டி
அரணமைத்தோம்.
அதன்பெயரும் பதுங்குகுழி.
மழைத்தண்ணீர் ஊறிவிட
மனம் பதைத்துக்கிடந்தோம்.
செல்லடியில் செத்தவரை
சிதறிய தசைத்துண்டுகளை
பதுங்கு குழிக்குள் மூடிவிட்டு
உயிரற்ற உணர்வோடு எம்
உயிர் காக்க நடந்தோம்.
வட்டுவாகல்வரை நாங்கள்
வெட்டிய பதுங்குகுழிகள் பல.
பதுங்கிய குழிக்குள்ளும் பல்
குண்டு வந்துவிழப் பதறிநின்றோம்.
முள்ளிவாய்க்கால் நிமெங்கும்
பதுங்கு குழிகளுக்குள் உடல்கள்
குவிந்து கிடந்தன.
துரத்திவந்த நீசப்படையினரோ
பதுங்குகுழிகளையும் எரித்தனர்.
நினைவுகள் நடுங்க நினைக்கிறோம்.
இதற்கொரு விதியை இனிநாம்
படைக்கவேண்டும்.