14.05.2025 – முள்ளிவாய்க்கால்.

வீரவேங்கை
கவியரசி / அமலா
கனகரட்ணம் பாமினி
பொலிகண்டி – முள்ளிவாய்க்கால்
05.11.1977 – 17.05.2009
தமிழீழத்தின் எழில் கொஞ்சும் வடமராட்சியின் பொலிகண்டி மண்ணில் கனகரட்ணம் தங்கரத்தினம் தம்பதியினருக்கு 05.11.1977 அன்று முத்தாக மலர்ந்தார் எங்கள் அமலா.
இவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாமினி. தனது பாடசாலைக் கல்வியை பொலிகண்டியிலுள்ள இ.த.க. பாடசாலையில் கற்றார். ஆண்டு 11 இல் கல்வி கற்கும்போது தான் அவர் மனதில் விடுதலைவேட்கை எழுந்தது.
1993 ஆம் ஆண்டு தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்தார். ஆரம்பப்பயிற்சியைப் பெறுவதற்காகத் திலகா 1 அணியில் இணைக்கப்பட்டார்.
அவர் உடல் உயரத்தில் தான் குறைவு, ஆனால் வீரத்திலும் விடாமுயற்சியிலும் உயரம் மிகப்பெரிது. தனது உயரம் தனது வளர்ச்சிக்குத் தடையென்று அவர் என்றுமே நினைத்ததில்லை.
எந்தப் பயிற்சியிலும் பின்வாங்கியதில்லை. அடிப்படைப் பயிற்சியுடன் நீச்சல் பயிற்சியையும் செவ்வனே முடித்தவர். அதன் அதன் பின்பு அடிப்படைக்கல்வி கற்பதற்காக தமிழீழப்படைத்துறைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு 3 மாத காலம் முடிந்தபின் வெளியேறிய அணியில் ஒருத்தியாக அமலாவும் தனது அடுத்த பணிக்காகப் பயணித்தார்.
அவர் சிறுத்தை அணிக்கு மாற்றப்பட்டு அங்கு போர்க்கருவி உற்பத்திப்பகுதிக்கு மாற்றப்பட்டார். எந்த வேலையானாலும் மிகவும் ஆர்வத்துடனும் திறமையாகவும் செய்துமுடிப்பார்.
பல இராணுவ வெற்றிகளில் அவரின் பங்கு உண்டு என்பதை பலர் அறியார். தேசத்தையும் தலைவனையும் நேசித்ததனால் எந்த வேலையானாலும் நேர்த்தியாகச் செய்து முடிப்பார். தேசத்திற்காகத் தன் தேகத்தை உருக்கியவர்.
பணியின் தேவை கருதிச் சில பாடங்கள் புகட்டப்பட்டபோது. அப்பாடங்களைச் சரிவரக்கற்றவர். அந்நேரங்களில் அடிக்கடி அவர் சொல்வது என் பேனா முனை எல்லாவற்றையும் விட பெரிது’ என்று. விஞ்ஞானப்பாடம் என்றால் மிகவும் விருப்பம். சில பரீட்சைகளை சிறப்பாகச் செய்திடுவார்.
போராளிகளுக்கு ‘ருசிக்குச் சாப்பிட வேண்டாம். பசிக்குச் சாப்பிடுங்கோ என பக்குவமாய் பங்கிட்டுத் தந்திடும் அன்னை. வேலை என்றால் வேலை. விளையாட்டு என்றால் விளையாட்டு. படிப்பு என்றால் படிப்பு என்றபோதும் இடைவெளி நேரங்களில் சிற்றுண்டிகள் செய்து பரிமாறுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
17 மே 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழ மண்காத்த மாவீரர் வரிசையில் இணைந்து கொண்டார்.
வீரவேங்கைகளின் வீரத்தடங்களோடு…
“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த எம் மாவீரர்கள் மகத்தானவர்கள். எம் மாவீரர்களின் அற்புதமான தியாகங்கள், அவர்களின் உயரிய அர்ப்பணிப்புகள், அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றையும் கொண்ட ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது விடுதலைப்போராட்ட வரலாறு இன்றும் வழிகாட்டிநிற்கின்றது. மாவீரரது வரலாற்றைப் பதியம் செய்து, அடுத்த தலைமுறைகளுக்குச் சரியான முறையில் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இவ் ஆவணத்தை ஆண்டுதோறும் நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர்நாளில் வெளியிட்டுவைப்பதில் நாங்கள்
இம்மாவீரர்களை எமது அமைப்பின் மரபுரீதியாக வீரவேங்கை என்றே தொடர்ந்தும் அடையாளப்படுத்தியுள்ளோம். ஆனால், இது மாவீரர்களின் இராணுவத் தரநிலையினைக் குறிப்பதாக அடையாளப்படுத்தி நிற்கவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அக, புறச் சூழ்நிலைகள் முற்றிலும் பாதகமாக அமைந்திருந்தபோதும் பல இயக்கங்கள் உருவாகியபோதும் அதனைச் சவாலாக ஏற்றுக் களமாடிய எமது இயக்கம், உலகின் வேறு விடுதலை இயக்கங்களையும் விட வேறுபட்டும் மேம்பட்டும் நிற்கும் தனித்துவமான வீரவரலாற்றை வீரவேங்கை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
வீரவேங்கை என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் வீரவணக்கம் என்று ஆரம்பிக்கும் மாவீரர் உறுதிப்பிரமாணப் பத்திரத்தில் ஒவ்வொரு மாவீரர் பெயருக்கும் முன்பாக வீரவேங்கை என்று சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டு, இராணுவத்தரநிலையுடன் பெயர் குறிப்பிடப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டதோடு வித்துடல் விதைக்கப்பட்டது. இவ் வீரவேங்கை என்ற தனிச்சிறப்பு அடையாளம், வரலாறாக அவர்களின் கல்லறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளது தனித்துவ அடையாளமிக்கதும் அறம், வீரம், உயர் ஒழுக்கம், உயர் அர்ப்பணிப்பு, மண்பற்று, கொள்கைப்பற்று, தலைமைப்பற்று என அதி உன்னத குணாதிசயங்களையும் இந்த வீரவேங்கை தன்னகத்தே தாங்கிநின்று பெருமைகொள்கின்றது. எனவே, இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற வரலாற்றுக்குரியவர்களுக்கு வீரவேங்கை என்பது வரலாற்றுரீதியான மறுக்கமுடியாத ஒன்று.
ஆகவே, அமைப்பின் தற்போதுள்ள சூழமைவில் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கு, இராணுவத்தரநிலை வழங்கமுடியாதுள்ளதனால் எமது அமைப்பின் மரபுரீதியான வீரவேங்கை என்ற தனித்துவத்தையே நாம் பின்பற்றியுள்ளோம்.