14.05.2025 – முள்ளிவாய்க்கால்.
தனியாக ஒருவனுக்கு
உணவில்லை என்றால்
உலகைக் கொளுத்துவோம்
என்றவன் பாரதி.
முள்ளிவாய்க்காலில்
இலட்சம் இலட்சமாய்
பசித்துக்கிடந்தபோது எந்த
உலகமும் எரியவில்லை
நாங்களே பசியில் எரிந்தோம்.
முள்ளிவாய்க்காலின் பசி
என்றுமே மனம்விட்டகலாதது.
உண்டிசுருங்கி உயிர்வலிக்க
பசியால்அழுத பிள்ளைகளைப்
பார்த்திருந்த நாட்கள் அவை.
பசித்த வயிற்றுடனே மண்ணில்
மடிந்தவர்கள் பலபேர்.
மழைநீரைக் குடித்து
மனம் நிறைத்தோர் பலபேர்.
இலைகளையும் காய்களையும்
எட்டிப்பறித்துப் பசியாற்றினோம்.
ஆனாலும் இன்றும்கூடத்
தீராப்பசியோடு தானிருக்கிறோம்.
விடுதலைப் பசியும்
வயிற்றுப்பசியும் வாட்டிவதைத்த
நாட்களைக் கடந்தோம்.
நெல்விளையும் நிலமெல்லாம்
கொல்வோரின் குண்டுச் சிதறல்.
சொல்லியழ யாருமற்ற
கொடுந்துயர வழிநடந்தோம்.
பார்த்திருந்தோரும்
பழித்திருந்தோரும்
சிரித்திருந்தோரும்
வியந்திருக்க வரலாறொன்று
பிறக்கும் எங்கள்
வானமும் ஒருநாள் விடியும்.