17.05.2025 – முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாத அரசு சர்வதேச நாடுகளின் துணையுடன் நிகழ்த்திய தமிழின அழிப்பின் அவலங்களை உள்ளடக்கிய ஒளிப்படத் தொகுப்பாக இத்தொகுப்பு உருவாக்கம் பெற்றுள்ளது.
இது தமிழின அழிப்பு சார்ந்த ஆவணச்சான்றாக தொகுப்புச் செய்யப்பட்டு தமிழின அழிப்பு நினைவு நாளான மே 18 இன்று, ஒளிப்படத் தொகுப்பு நூலாக வெளியீடு செய்யப்படுகிறது.




































































தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், விடுதலைப் போராட்ட வரலாறு மற்றும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு சார்ந்த ஆவணங்களை, ஒளிப்பதிவாகவும் புகைப்படப் பதிவாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்தியதோடு, தேவையானவற்றை வையகம் முழுவதும் அனைவரும் பார்க்க கூடியவகையில் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர்.
ஆரம்பகாலம் தொட்டு 2009 மே வரை போராட்டத்தின் ஒவ்வொரு விடயங்களையும் மக்கள் வாழ்க்கை நிலையினையும் போராட்ட வலிகளையும் ஆவணப்படுத்தியிருந்தனர்.
இது வரலாற்றுத் தேவையாகவும் இனவிடுதலையின் சாட்சியாகவும் உலகத்தின் மனச்சாட்சியினைத் தட்டும் மூலோபாயமாகவும் மேற்கொள்ளப்பட்ட உயரிய பணியாகும்.
அந்த வகையிலேயே யுத்தத்தின் 2008/2009 காலத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பின் சாட்சியான ஆவணங்களைப் பதிவு செய்து, ஒளிக் காட்சிகளாகவும் புகைப்படக் காட்சிகளாகவும் வெளிப்படுத்தும் வரலாற்றுக் கடமையினை போராளிகள் மற்றும் ஊடகத்துறையினர் முன்னெடுத்திருந்தனர். இச்செயற்பாடு 2009 யுத்தத்தின் முடிவுவரையிலும் தொடர்ந்தது.
தமிழர்களின் நியாயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையினையும் தமிழினம் அழிக்கப்பட்ட கொடூரங்களையும் உலகுக்குக் காண்பிக்கவே, தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஊடகத்துறையினரூடாக அதனைச் செய்வித்தனர். பல சந்தர்ப்பங்களில் போராளிகளின் காட்சிப் பதிவுகளே வரலாற்றுச் சாட்சியங்களாக இருந்துள்ளன.
சாட்சியமற்ற விதமாக நடத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் வலுவான சாட்சியங்களாக வெளியிடப்படுகின்ற புகைப்படத் தொகுப்பும் அமைத்துள்ளது. இறுதி யுத்தம் நடந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் மற்றும் 2009 போரின் இறுதிக்காலங்களில் நடைபெற்றவை அனைத்தும் சிறிலங்கா அரசினால் மூடிமறைக்கப்பட்டு, தொடர்புகளற்ற நிலையில் முற்றாகவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
பாதுகாப்பு வலையங்கள் என சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு வலையத்தில் தஞ்சமடைந்த மக்கள்மீது, நடாத்தப்பட்ட தொடர் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், நச்சுக் குண்டுத் தாக்குதல்களில் சிங்கள இராணுவம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது.
அவ்வாறு வெளித்தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போரில், சிங்கள இராணுவத் தாக்குதல் மற்றும் உணவு, மருந்துத் தடையினால் மக்கள் சந்தித்த மரணங்களையும் அவல நிலையையும் இங்குள்ள ஒளிப்படங்கள் பதிவு செய்துள்ளன.
வெளித்தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தி, மக்கள் வாழிடங்களை வன்வளைப்புச் செய்து, நன்கு திட்டமிட்டு நடாத்திய தமிழின அழிப்பு யுத்தத்தின் திறக்கப்பட்ட உண்மையாக தமிழின அழிப்பின் சாட்சியாக இப்பதிவுகளும் அமைந்துள்ளது. என்பதை அனைவரும் அறிவோம். படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது போராளிகளும் ஒளிப்படக் கலைஞர்கள் பலரும் தமது உயிரினை ஈந்துள்ளனர்.
இவ் ஒளிப்படங்கள் போராட்டக்காலங்களில் யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகெங்குமுள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன.
சிலர் இதனை பொறுப்பற்ற முறையில் தமது சுய தேவைகளுக்கெனப் பயன்படுத்தும் நிலைமையைக் காண்கிறோம். ஒரு இனத்தின் சாட்சி ஆவணங்களை தனிநபர்கள் உரிமையாக்கும் முறையற்ற செயல்களானது கண்டனத்துக்குரியது. அவ்வாறானவர்களின் சுயநலச்சிந்தனைக்கு அப்பால், உண்மையானவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆழமான சிந்தனையின் வெளிப்பாடகத்
தமிழீழ ஆவணக்காப்பகம் உருவாக்கம் பெற்று, வரலாற்று ஆவணங்களை பதிவு செய்தும் வருகின்றது.ஆவணக்காப்பகத்தில் இணைக்கப்படும் இவ்ஒளிப்படங்களை அனைவரும் பார்வையிடுவதோடு, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலுக்கான பயணத்தின் சாட்சிகளாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த ஆவண உருவாக்கத்திலும் இதனை வெளியீடு செய்வதிலும் உதவிய அனைவரையும் அன்புரிமையுடன் பற்றிக்கொள்வதோடு நன்றியினையும் கூறிக்கொள்கின்றோம்.
அந்தவகையிலே தமிழர்களின் வரலாறுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகள் என்பவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழீழ ஆவணக்கப்பகம் தனது பணியை மேற்கொண்டு வருகின்றது.தொடர்ந்தும் இது போன்ற பல ஆவணங்களை சேகரித்து வெளியீடு செய்வதோடு, அவற்றைத் தமிழீழ ஆவணக்காப்பகத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.
நன்றி
தொகுப்பு: தமிழீழ ஆவணக்காப்பகம் |TAMILEELAMARCHIVE
வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.