23.05.2025 – புதுடில்லி.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு அந்த நபரையே திருமணம் செய்து கொண்ட பெண், அந்த சம்பவத்தை குற்றமாக கருதாததால், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாய், 2018ல் போலீசில் புகார் அளித்தார். அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி, 25 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை அந்த இளைஞர் கடத்தி சென்றதாக அவரது தாய் புகார் அளித்தார். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம், 2022ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அந்த இளைஞர் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதை கடந்த நிலையில், அந்த இளைஞருடன் விரும்பியே சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, அந்த இளைஞரை உயர் நீதிமன்றம் 2023ல் விடுதலை செய்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், ‘இளம் பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட இன்பத்திற்காக அவர் விட்டுக்கொடுப்பதை அந்த பெண் மீதான குற்றமாகவே இந்த சமூகம் பார்க்கும்’ என, தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
உயர் நீதிமன்றத்தின் கருத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பதாகவும், பெண்களை வகைப்படுத்துவதாகவும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது.
நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதன் விபரம்:
நிபுணர் குழுவின் அறிக்கையின்படி இந்த வழக்கு சட்டத்தின் பார்வையில் குற்றமாக கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் இதை குற்றமாக கருதவில்லை.
அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம், அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அவரது கணவர் கைது செய்யப்பட்ட பின் போலீசிடம் இருந்தும், சட்ட நடைமுறைகளில் இருந்தும் கணவரை காப்பாற்ற, அந்த பெண் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திஉள்ளார்.
இந்த சமூகம் அந்த பெண்ணை ஏளனம் செய்துள்ளது; சொந்த குடும்பம் ஒதுக்கி வைத்துள்ளது. இவை தான் அந்த பெண்ணை கடுமையாக பாதித்துள்ளதாக, நிபுணர் குழு தெரிவிக்கிறது.
இந்த வழக்கின் உண்மைகள் சமூகத்தின் கண்களை திறக்கின்றன. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, குற்றவாளிக்கு இந்த வழக்கில் தண்டனை எதுவும் வழங்க தேவையில்லை என நீதிமன்றம் கருதுகிறது. – இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.