25.05.2025 – ஜெய்ப்பூர்.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் டுபிளசி, பீல்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (6), பிரப்சிம்ரன் சிங் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. போட்டியின் 6வது ஓவரை விப்ராஜ் வீசினார். முதல் இரு பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்த இங்லிஸ் (12 பந்து, 32 ரன், ஸ்டிரைக் ரேட் 266.66), 3வது பந்தில் ஸ்டப்சிடம் ‘கேட்ச்’ கொடுத்தார்.
மீண்டும் வந்த விப்ராஜ், தனது இரண்டாவது ஓவரில் பிரப்சிம்ரனை (28 ரன், 18 பந்து) போல்டாக்கி அனுப்பி வைத்தார். குல்தீப் பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயஷ், விப்ராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவருக்கு கைகொடுத்த வதேரா, 16 ரன் (16 பந்து) மட்டும் எடுத்த நிலையில், முகேஷ் குமார் ‘வேகத்தில்’ அவுட்டானார். ஷசாங்க் சிங் (11) நிலைக்கவில்லை. முகேஷ் குமார் வீசிய 17 வது ஓவரில் ரன் மழை பொழிந்த ஸ்டாய்னிஸ், 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 25 ரன் எடுக்கப்பட்டன.
முகேஷ் பந்தில் பவுண்டரி அடித்த ஸ்ரேயஷ் அரைசதம் கடந்தார். 34 பந்தில் 53 ரன் எடுத்த ஸ்ரேயஷ், குல்தீப் சுழலில் சிக்கினார். அஷ்மதுல்லா (1) ஏமாற்றினார். மோகித் சர்மா வீசிய 19 வது ஓவரில் ஸ்டாய்னிஸ் 2 சிக்சர், 2 பவுண்டரி என விளாச, 22 ரன் கிடைத்தன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (44 ரன், 16 பந்து, ஸ்டிரைக் ரேட் 275.00), ஹர்பிரீத் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
பஞ்சாப் அணிக்கு டுபிளசி, கருண் நாயர் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது ராகுல் (35) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் டுபிளசி (23) கிளம்பினார். செடிகுல்லா 22 ரன் எடுத்து அவுட்டானார். பின், கருண் நாயர், சமீர் ரிஸ்வி இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர்.
இந்நிலையில் ஹர்பிரீத் பந்தில் கருண் நாயர் (44) அவுட்டானார். சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரைசதம் எட்ட, பஞ்சாப் தோல்வி உறுதியானது. கடைசியில் ஸ்டாய்னிஸ் பந்தை ஸ்டப்ஸ் சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.3 ஓவரில் 208/4 ரன் எடுத்து, ஆறுதல் வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ் (18), சமீர் ரிஸ்வி (58) அவுட்டாகாமல் இருந்தனர்.