30.05.2025 – யாழ்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.05.2025) நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இணைத் தலைவரான வடக்கின் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரது இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், கே.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.றஜீவன், இ.அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, அதனூடாக செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
மேலும், துறை ரீதியான முன்னேற்றம் குறித்த மீளாய்வில் சேவைத்துறைகள் சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் பேசப்பட்டன.
அத்துடன் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைசார் விடயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, அம்புலன்ஸ் சாரதிகள் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.






