01.06.2025 – யாழ்.
உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்நிகழ்வு சிங்கள பேரினவாத வன்முறைக் குழுவொன்றால் நடந்தது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், என்பனவற்றை அழித்தொழித்த சிங்கள வன்முறைக் குழு 1981 யூன் ஒன்றாம் திகதி தமிழரின் பொக்கிசமான யாழ்ப்பாணப் பொது நூலகத்தை முற்றாக எரியூட்டப்பட்டு தமிழின அழிப்பை மேற்கொண்டது . தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.
இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
அன்றைய அரசாங்கம்; வன்முறைகளுக்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்கான சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவில்லை என அமெரிக்காவின் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் 1981 இலங்கைக்கான உண்மை அறியும் ஆணைக்குழுவின் தலைவருமான ஓர்வில் எச். ஷெல் தெரிவித்துள்ளார். இக்குற்றங்களுக்கு எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுச் சமூகத்தால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுப் போற்றப்பட்டது; அதைவிட முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியாக யாழ் நூலகம் விளங்கியது.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஓர் இனத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்த நூலகத்தைத்தான் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டு அழித்தனர். யாழ்ப்பாணம் நூலக எரிப்பு என்பது ஒரு தனி சம்பவமல்ல அது இலங்கைத் தமிழர் பிரச்னையில், தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வு!
நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் தலைவர்கள் வந்திருந்த தருணம் அது.
எல்லாமாக சுமார் ஒரு லட்சம் புத்தகக் களஞ்சியம் இந்த வெறியாட்டத்தின் மூலம் நாசமாக்கப்பட்டது. நூலகக் கட்டிடமும் தீயினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது.
ஆசியாவிலேயே சிறந்த பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் என்ற அறிவுக்களஞ்சியம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியவர்களினால் அழித்தொழிக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் அறிவுசார்ந்த செல்வத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.