சவுத்தாம்ப்டன், பிரிட்டன்.
இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது.
முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் (60), பென் டக்கெட் (84) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பட்லர் (22), கேப்டன் ஹாரி புரூக் (35*), ஜேக்கப் பெத்தேல் (36*) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (9), ஜான்சன் சார்லஸ் (9) ஏமாற்றினர். கேப்டன் ஷாய் ஹோப் (45), ஹெட்மயர் (26) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய ராவ்மன் பாவெல் அரைசதம் விளாசினார். ஜேசன் ஹோல்டர் (25) ஓரளவு கைகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்து தோல்வியடைந்தது. பாவெல் (79) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருதை டக்கெட் வென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் பட்லர் (165 ரன்) கைப்பற்றினார்.