லார்ட்ஸ், லண்டன் –
தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைக்க காத்திருக்கிறது. பைனலில் மார்க்ரம் சதம் கைகொடுக்க, வெற்றியை நெருங்குகிறது. ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன.
இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்திருந்தது. ஸ்டார்க் (16), லியான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்டார்க் அரைசதம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரபாடா ‘வேகத்தில்’ நாதன் லியான் (2) வெளியேறினார். ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் தனது 11வது அரைசதத்தை பதிவு செய்தார். பத்தாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது மார்க்ரம் பந்தில் ஹேசல்வுட் (17) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஸ்டார்க் (58) அவுட்டாகாமல் இருந்தார்.
தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 4, லுங்கிடி 3 விக்கெட் சாய்த்தனர்.
மார்க்ரம் அபாரம்: பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (6) ஏமாற்றினார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ முல்டர் (27) வெளியேறினார். பவுமா, டெஸ்ட் அரங்கில் தனது 25வது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்க்ரம், தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன் மட்டும் தேவைப்படுவதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இரங்கல் – ஆமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன், மைதானத்தில் இருந்த அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஸ்மித் காயம் -ஸ்டார்க் வீசிய 20வது ஓவரின் 2வது பந்தை தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா அடித்தார். ‘ஸ்லிப்’ பகுதியில் நின்ற ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி வேகமாக வந்த பந்தை பிடிக்க முயன்ற போது அவரது வலது கை சுண்டு விரலில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த ஸ்மித், உடனடியாக ‘பெவிலியன்’ திரும்பினார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காயம் உறுதியானதால், இப்போட்டியில் மீதமுள்ள 2 நாட்கள் ஸ்மித் களமிறங்கமாட்டார்.