தனியாரிடம் மின்சாரம் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.

இதேபோல், பல மாநில மின் வாரியங்கள் கடன்களை வாங்கியுள்ளன. இதனால், அவை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே, மாநில மின் வாரியங்களின் கடனை அடைக்க, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிவிக்குமாறு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை, டில்லியில் உள்ள மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
அதற்கு ஆணையம் அளித்துள்ள பதிலில், ‘மின் வாரிய கடனில் ஆணையம் அனுமதித்தது, 83,000 கோடி ரூபாய். அந்த கடனை அடைக்கவும், மின் வாரிய நிதி நெருக்கடியை சரிசெய்யவும், ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது, மின் கட்டணம் உயர்த்தப்படாது. மின் வாரியத்தின் இழப்பை அரசு ஏற்கிறது. கடனை அடைக்கும் வழி வகை தொடர்பாக, அரசு செயல் திட்டம் வகுக்கும். இது, தயாரானதும் தெரிவிக்கப்படும்’ என, தெரிவித்துள்ளது.