-அவுரையா-
உ.பி.,யின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு சோனு, 9, மாதவ், 6, ஆதித்யா, 4, மற்றும் மங்கள், 2, என நான்கு மகன்கள். பிரியங்காவின் கணவர் இறந்தவிட்டார்.

அதன்பின், ஆஷிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய பிரியங்கா, காதலன் ஆஷிஷ் உடன் சேர்ந்து அவர்களை கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி கடந்த ஆண்டு, தேவர்பூரில் உள்ள செங்கர் ஆற்றுக்கு நான்கு மகன்களையும் அழைத்துச் சென்றார்.
அங்கு, குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து தண்ணீரில் வீசியதாகக் கூறப்படுகிறது.
மயங்கி நிலையில் கிடந்த மூத்த மகனான சோனுவை மட்டும் உள்ளூர்வாசிகள் மீட்டனர். மற்ற மூன்று மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிராம மக்கள் அளித்த தகவலின்படி, கொடூர தாய் பிரியங்காவையும், காதலன் ஆஷிஷையும் போலீசார் கைது செய்தனர். உயிர் பிழைத்த மகன் சோனு, தன் தாய்க்கு எதிராக சாட்சி அளித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ‘ஒரு தாய், காதலனுடன் சேர்ந்து அப்பாவி குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்றது அரிதிலும் அரிது’ என, அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, கூடுதல் அமர்வு நீதிபதி சயிப் அகமது, மூன்று குழந்தைகளை மூழ்கடித்து கொன்ற பிரியங்காவுக்கு மரண தண்டனையும், 2.5 லட்சம் ரூபாய் அபராதமும், காதலன் ஆஷிஷுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்த தொகையில், 75 சதவீதத்தை உயிர் பிழைத்த குழந்தை சோனுவுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.