தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி ஒற்றுமை முயற்சிகளில் தமிழரசுக்கட்சி பங்கெடுக்குமா என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்துதான் பயணிக்கவேண்டும் எனவும், தமிழர்களுக்கான நியாயமான சுயாட்சியை உறுதிப்படுத்துவதற்கு கூட்டுமுயற்சி அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இருப்பினும் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மிகமோசமான வார்த்தைப்பிரயோகங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டதன் பின்னர், மீண்டும் தற்போது ஒற்றுமை முயற்சி பற்றிப் பேசுகையில், ஏற்கனவே பேசிய மோசமான பேச்சுக்களே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தினார்.