பொது சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, 3.60 லட்சம் பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தெருநாய்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
இதனால், ஒவ்வொரு தெருவிலும் 8 முதல் 10 நாய்கள் சுற்றி வருகின்றன. அவை, சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன.
தவிர, சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. சென்னையில் மட்டும் தினமும், 10க்கும் மேற்பட்டோர் தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாய்க்கடி தடுப்பதற்கு நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.