சென்னை
‘தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை, மராத்தியர்களின் கோட்டையாக மாற்ற முயல்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’ என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழ் மன்னராகிய கோனேரிக்கோன் என்பவரால், செஞ்சி கோட்டை கட்டப்பட்டது. உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம், மராத்திய மன்னர் சிவாஜியின், 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து, செஞ்சியை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை, மராத்தியர்களின் கோட்டையாக மாற்ற, மஹாராஷ்டிரா மாநில அரசு முயல்வதும், அதற்கு மத்திய அரசு துணை நிற்பதும் கண்டனத்துக்குரியது.
இந்த வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு செய்கிற பச்சைத் துரோகம்.
செஞ்சி கோட்டை தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட நம் பாரம்பரிய சொத்து. யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்திலேயே, செஞ்சி கோட்டை புகழ்பெற்று விளங்கியது.
செஞ்சி கோட்டையை, கி.பி., 1190 முதல் ஆனந்தகோனும், கி.பி., 1240 முதல் கிருஷ்ணகோனும், கி.பி., 1270 முதல் கோனேரிக்கோனும், அதன்பின் அவரது வாரிசுகள் கோவிந்தகோன், வலியகோன், கோட்டியலிங்ககோன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆண்ட நீண்ட வரலாறு உடையது.
அதன்பின், விஜயநகர நாயக்கர்கள், மராத்தியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என, மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர்.
செஞ்சியை, நாயக்க மன்னரிடமிருந்து பிஜப்பூர் சுல்தான் கி.பி., 1679ல் கைப்பற்றினார். 28 ஆண்டுகள் பிஜப்பூர் சுல்தான் ஆட்சிக்கு பின், 1677ல் மராத்திய மன்னர் சிவாஜி செஞ்சி கோட்டையை கைப்பற்றி, தன் அரசுடன் இணைத்துக் கொண்டார்.
அதன்பிறகும் செஞ்சி கோட்டை பல்வேறு ஆளுமையின் கீழ் இருந்தது. இதில், மராத்தியர்கள் செஞ்சி கோட்டையை ஆண்டது, 22 ஆண்டுகள் தான். அத்துடன், செஞ்சி கோட்டையில் மராத்தியர்கள் வலுவான கட்டுமானங்கள் செய்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.
மராத்தியரை விட செஞ்சி கோட்டையை நாயக்கர், ஆற்காடு நவாப், பிஜப்பூர் சுல்தான், முகலாயர், ஆங்கிலேயர் ஆகியோர் அதிக ஆண்டுகள் ஆண்டாலும், அந்த கோட்டை தமிழ் மன்னராகிய கோனேரிக்கோனுக்கு சொந்தமானது என்பதே, வரலாற்றில் பதிய வேண்டும்.
செஞ்சி பகுதியில் உள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டை தேசிங்குராஜா கோட்டை என்று அழைப்பதையும் அமைதியாக அனுமதித்ததன் விளைவு, மராத்தியர்களுக்கு சொந்தமானது என்ற நிலை வந்துள்ளது.
தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, நம் கோட்டையை அயலாரின் கோட்டை என்பதை அடையாளப்படுத்துவதை, அரசு எப்படி அனுமதிக்கிறது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதும் வெட்கக்கேடானது.
மஹாராஷ்டிர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டுச் சதிக்கு, தமிழக அரசு துணை போவது, தமிழர்களுக்கு இழைத்துள்ள பச்சைத் துரோகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.