கொழும்பு கோட்டை
செம்மணியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம் என்று கிரிசாந்தி குமாரசாமி படுகொலையின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலத்தை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவும், இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் மூடிமறைத்தார்கள்.

தமிழர்கள் என்பதற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் படுகொலைக்க நீதி கோராத இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கு நீதி கோரும்.
வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வியாழக்கிழமை (17.07.2025) ‘செம்மணி சமூக படுகொலைக்கு எதிராக எழுச்சிக்கொள்வோம்’என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை இராணுவம் 90 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இக்காலப்பகுதியில் கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு,வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்.கொலை செய்யப்பட்ட தனது பிள்ளையை தேடி அவரது தாயாரும்,சகோதரரும், பக்கத்து வீட்டு ஒரு சகோதரரும் செல்கிறார்கள்.அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இச்சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சோமரத்ன ராஜபக்ஷ என்றும் இராணுவ சிப்பாய் ‘செம்மணி பகுதியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம்’என்று வாக்குமூலமளித்துள்ளார்.400 இற்கும் அதிகமானோர் பலவந்தமான முறையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்.

சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் தெற்கை சேர்ந்த சிங்களவர். இந்த சாட்சியத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் மூடிமறைத்தார்கள்.
செம்மணி பகுதியில் கடந்த மாதம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மனித எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு, பின்னர் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதுவரையில் 60 இற்கும் மேற்பட்ட மனித எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுப்பிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளில் பால்குடி குழந்தைகளினதும், சிறுவர்களினதும், எழும்புகூடுகள் காணப்படுகின்றன. எலும்புகூடுகளுடன் பாடசாலை புத்தகப்பை, கைபொம்மை, ஆகியன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.இவர்களை பயங்கரவாதிகளாக்கியது யார், இவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்தவர்கள் யார், தமிழர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்களே தவிர பயங்கரவாதிகள் என்பதற்காகவல்ல, இதற்காகவே நாங்கள் நீதி கோருகிறோம்.

இழைக்கப்பட்ட அநீதிக்கு எந்த அரசாங்கங்களும் நீதியை வழங்காது என்பதை அறிவோம்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமாதான புறாவாக சித்தரிக்கப்பட்டார்.ஆனால் அவர் யுத்தத்தை முன்னின்று நடத்தி கொலை செய்தார். மஹிந்த ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தார்.ரணில்,கோட்டபய,ஆகியோரும் இனபடுகொலையாளிகளே செம்மணி இனப்படுகொலையின் சாட்சியாக உள்ளது.இனப்படுகொலை 90 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது.அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்காது ஏனெனில் இவர்கள் இராணுவத்துக்கு பயந்தவர்கள்.அவர்களின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள்.
மாத்தளை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் மனித புதைகுழி கண்டுப்பிடிக்கப்பட்டது.நாங்கள் இதற்கு நீதி கோரினோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு நீதி கோரவில்லை. தமது உறுப்பினர்களுக்கு நீதி கோராதவர்கள் தமிழ் மக்களுக்கு நீதி கோருவார்களா, வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தமிழர்கள் என்பதற்காகவே இந்த கொலைகள் இடம்பெற்றன. நீதி கிடைக்க வேண்டுமாயின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட வேண்டும். – அப்போது தான் நீதி கிடைக்கும் என்றார்.
