
19.07.2025 | நெதர்லாந்து.
அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே!
தமிழீழம் என்ற விடுதலை இலக்கினைச் சிதைக்கும் விளக்கேற்றல் நிகழ்வைப் புறக்கணிப்போம்!
எமது தமிழீழ மண்ணிலே அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புக்களும் மற்றும் படுகொலைகளுமென,சிறிலங்கா சிங்கள இனவாாத அரசினால் திட்டமிட்ட முறையில் தமிழ்மக்களிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், இதற்கெதிராக அறவழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அதற்கான தீர்வுகளோ அன்றி அமைதியான சூழலோ ஏற்படுத்தப்படாத சூழமைவில், எம்மக்களையும் மண்ணையும் காப்பாற்ற எழுச்சி கொண்டெழுந்ததே எமது தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். உலகமே வியந்து நின்ற, உன்னத தியாகங்களின் வழியே, எம் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடாத்தியவர் எமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களே.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சிற்பியும் விடுதலைச் சித்தாந்தமும் அதன் இயங்குவிசையும் அவரே. எமது தேசியத்தலைவரின் சிந்தனையின் வழிநின்று விடுதலைப்பயணம் இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தேசியத்தலைவரின் சிந்தனையைச் சிதைத்து, தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய விடுதலைப்பயணத்தை அழிப்பதை நோக்கமாகக்கொண்டு, சிறு குழுக்கள் சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு நாசகாரச்சக்திகளினால் புலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செய்து போராளிகளினதும், மக்களினதும் உளவுரணைச் சிதைத்து, விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை இல்லாதொழிக்கவே சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசும் வல்லாதிக்க சக்திகளும் கடும் பிரயத்தனம் செய்து வருகிறனர். எமது தேசியத்தலைவருக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்யும் நிகழ்வானது தெளிவற்ற முடிவுகளுக்கு மத்தியில் குறிப்பிட்ட குழுவினரால் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வீரவணக்கம் செய்யும் நாட்களிலேயே தடுமாற்றம், மே 17,18,19 என பல தரப்புகளால் அறிவிப்புக்களைச் செய்து, மக்கள் மத்தியில் குழப்பமான சூழலை உருவாக்கி, சிறுபிள்ளைத்தனமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளமை அருவருக்கத்தக்க விடயமாகும்.
எதிரிகளின் நிகழ்ச்சித்திட்டங்களோடு களமிறங்கியுள்ள இக்குழுக்களின் தேசியத்தலைவருக்கான விளக்கேற்றல் என்னும் சதித்திட்டத்தை இனங்கண்டு, அதனை முறியடித்துத் தமிழீழ மக்களனைவரும் அதனைப் புறக்கணிக்கவேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
“தேசியத்தலைவர் வருகிறார்” என ஒரு தரப்பும் “தேசியத்தலைவருக்கு விளக்கேற்றல்” என மறுதரப்பும் இணைந்து, தமிழீழ விடுதலைச்சித்தாந்தத்தை சிதைத்து, விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியினை முன்னெடுக்க யாரும் முன்வரக் கூடாதென்பதைத் தூரநோக்குப் பார்வையாகக் கொண்டு, தமிழீழம் என்ற விடுதலை நோக்கிய இலக்கினை அழித்து, தேசியத்தலைவருக்கான வீரவணக்கமும் தேசியத் தலைவரின் வருகையும் என்ற இருமுனை முலோபாய நாசகார நகர்வுகளை .எதிரிகள் முன்னெடுத்துள்ளனர். இச்சூழலில், இதனைத் தெளிவாக மக்கள் புரிந்துகொண்டு, வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையே, எமது விடுதலை வழிகாட்டி என்பதை உளமார ஏற்று, எமக்காகத் தம்முயிரைஈந்த மாவீரர்களின் ஈகங்களின் வழிநின்று, எத்தடைவரினும் அத்தடை உடைத்து, தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனை வழியே தொடர்ந்தும் போராடுவோம் என உறுதிகொள்வோமாக!
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நெதர்லாந்து
