சென்னை
தமிழக அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என, பல்வேறு பாடங்களை பயிற்றுவிப்பதற்காக, 12,000 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வாரத்தில், மூன்று நாட்கள் வேலை அளித்து, 12,500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் கோரி போராடிய போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., தங்கள் ஆட்சி அமைத்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அதை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 12 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடினர்.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை நேற்று பேரணியாக சென்றனர். மைதானம் அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வெளியூர் செல்ல வேண்டியவர்களை மட்டும் கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர். தொடர்ந்து போராடிய 100 பேரை கைது செய்து, சமூக நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க தலைவர் முருகதாஸ், சர்க்கரை அளவு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் பேட்டியளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், “பகுதிநேர ஆசிரி யர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்,” என்றார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.நற்றமிழன் கூறுகையில், “இரண்டு நாட்களில் நல்ல முடிவு வரும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“அந்த உறுதியை நம்பி, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்கிறோம்,” என்றார்.