யூலை 23 2025
கறுப்பு யூலை: பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, பொறுப்புக்கூறலை வலியுறுத்தல்
இன்று, யூலை 23 ஆம் திகதி, கறுப்பு யூலையின் 42 ஆவது வருட நிறைவை IDCTE துயரத்தோடு நினைவுகூருகின்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றில், அரச அனுசரணையில் அரங்கேறிய ஒரு கட்டமைக்கப்பட்ட படுகொலை பயங்கர அத்தியாயம் இது. கறுப்பு யூலையின் போது காவு கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை நாம் நினைவுகூருகிறோம்.
இது, இனவெறியின் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்ட, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, சிறிலங்கா அரசால் வழிநடத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆகும். குறுகிய நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தமிழ் குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது வணிகங்கள் பற்றிய துல்லியமான தகவல்களுடன், பிக்குகள் மற்றும் பொலிசார் உள்ளிட்ட அரச தரப்பினரால் இந்த வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
தமிழர்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் உடமைகள் சூறையாடப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகின. பலர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர், நிர்வாணமாக்கப்பட்டனர் மற்றும் அடித்துக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவில் வெறுப்பு எரிமலையாக வெடித்ததன் விளைவாக, 3,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர், சுமார் 18,000 வீடுகள் தாக்கப்பட்டன, 100,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம்பெயர்ந்தனர், 5,000 க்கும் மேற்பட்ட வணிகங்கள் அழிக்கப்பட்டன மற்றும் பலர் நிரந்தரமாக தீவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு மேலாக, இலங்கை அரசாங்கம் மௌனம் காத்தது, தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை குறிவைத்து வன்முறை பரவ வேண்டுமென்றே அனுமதித்தது. வெலிக்கடைச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கூட சிறை அதிகாரிகளின் உடந்தையுடன் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த இனவழிப்பு, இலங்கை அரசின் தலைவர்களின் தூண்டுதலான அறிக்கைகளால் தீவிரமாகத் தூண்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 11 ஆம் திகதி, அன்றைய சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, “நான் தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று அறிவித்தார்.
இந்த கருத்து அரசின் ஆழமான இனவழிப்பு நோக்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து நடந்த தமிழர் விரோத இனவெறித் தாக்குதல்களின் பொது மற்றும் அரசியல் ரீதியான மறைமுக ஆதரவையும் வழங்கியது. 13 சிங்களப் படையினரின் கொலையின் விளைவாகவே கறுப்பு யூலை ஏற்பட்டது என்ற கருத்து ஒரு தவறான எண்ணமாகும். 1958 ஆம் ஆண்டு முதல் காலங்காலமாக தமிழர் விரோத இனவழிப்புத் தாக்குதல்கள் நடந்து வந்தன, மேலும் கறுப்பு யூலைக்கு முன்பே தமிழர்கள் சித்திரவதை, தடுப்புக்காவல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகளை எதிர்கொண்டு நிலைமை மோசமடைந்து வந்தது.
1983 ஆம் ஆண்டில் மட்டும், கறுப்பு யூலைக்கு முந்தைய மாதங்களில் அரச தரப்பினரால் வன்முறை அதிகரித்தது, தமிழர்கள், சிங்களவர்களின் விருப்பப்படி கொல்லப்பட்டனர். அரச அனுசரணையுடன் நடந்த வன்முறையில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்பட்டு, இதுவரையில் பொறுப்புக்கூறப்படவில்லை.
தமிழ் இனவழிப்புக்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச் செய்வதற்கான தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை IDCTE மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அனைத்துலகக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான எமது தொடர்ச்சியான பரப்புரைகள் மூலம் சரியான கருத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
