
விமானிகள் ஓய்வு மற்றும் பணியமர்த்தல் தொடர்பான ஏர் இந்தியாவின் 29 விதி மீறல்களுக்கு விளக்கம் அளிக்கும்படி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அளித்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்த விதிமீறல்கள் கடந்த ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை ஒரு ஆண்டுகாலம் கணக்கிடப்பட்டுள்ளன. மேலும் இந்த கணக்கீட்டில், ஏப்ரல் 27 முதல் மே 2 ஆம் தேதிக்கு இடையே 4 மிக நீண்ட துார சர்வதேச விமானங்கள் இருந்தன. இந்த விமானங்களில் கேபின் பணியாளர்கள் குறைவாக இருந்தனர்.
ஏப்ரல் 27ம் தேதி சிகாகோவிலிருந்து டில்லிக்கு வந்த விமானத்தில் 15 பேருக்கு பதிலாக 12 கேபின் பணியாளர்கள் இருந்தனர். இது தவிர மேலும் 3 விமானங்களில் 14 கேபின் பணியாளர்களே இருந்தனர். கேபின் பணியாளர் பயிற்சி தொடர்பாக மூன்று குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
கடந்த காலங்களில் விதிமுறைகளை மீறுவதற்கு பலமுறை எச்சரிக்கை மற்றும் அமலாக்க நடவடிக்கை இருந்தபோதிலும், இணக்க கண்காணிப்பு, குழு திட்டமிடல் மற்றும் பயிற்சி நிர்வாகம் தொடர்பான முறையான சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
மேலும், பயனுள்ள கட்டுப்பாட்டு வழிமுறைகளை நிறுவி செயல்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தில் மோசமான பாதுகாப்பு மேலாண்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளது.இந்த அறிவிப்புகளுக்கு பதிலளிக்க ஏர் இந்தியாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது – ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக ஏர் இந்தியாவால் செய்யப்பட்ட சில தன்னார்வ வெளிப்படுத்தல்கள் தொடர்பான ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து இந்த அறிவிப்புகள் பெறப்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாங்கள் மேற்கூறிய அறிவிப்புகளுக்கு பதிலளிப்போம்.
எங்கள் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.