இதனால் இரு நாடுகள் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தா மோன் தாம் கோவிலுக்கு இருநாடுகள் பரஸ்பர உரிமை கோரி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை நடந்து வருகிறது.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டினர் மீது கம்போடியா ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஒரு சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் கம்போடியா ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானப்படை விமானங்கள் குண்டு வீசித்தாக்குதல் நடத்தி உள்ளது. ஆறு இடங்களில் எப்.16 ஜெட் விமானங்கள் மூலம் தாய்லாந்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த மோதலில் பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். கம்போடியா ராணுவத்தினர். பி.எம்-21 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதில், இரண்டு தாய்லாந்து நாட்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். சுரின் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என தாய்லாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ஜிராயு ஹுவாங்சாப் தெரிவித்தார்.
கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், ”கம்போடியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான தாய்லாந்து ராணுவம் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தாய்லாந்து போர் விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தாய்லாந்து கிராமவாசிகள் கூறியதாவது: எனது முழு கிராமமும் ஒரு உள்ளூர் பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளது. நான் எல்லையில் வளர்ந்தேன், தாய்லாந்து-கம்போடியா மோதலை இதற்கு முன்பு அனுபவித்திருக்கிறேன். ஆனால் இந்த முறை மிகவும் தீவிரமானதாக உணர்கிறேன். இது மிகவும் பயங்கரமானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தாய்லாந்தின் 86 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தாய்லாந்து- கம்போடியா எல்லை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.