தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் ஓர் அங்கமே கறுப்பு ஜூலை. திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜூலை வன்முறைகள் அமைந்திருந்தன.

இதன் போது பல்லாயிரக் கணக்கில் தமிழீழத் தமிழர்கள் தங்கள் தாய்நிலத்தை பிரிந்து புலம்பெயர் தேசத்தில் அகதிகளாக புலம்பெயர காரணமாகவும் அமைந்திருந்தது.
சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் 23.07.2025 அன்று பேர்ண் Europa Platz முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு ஜூலை சார்ந்தும், தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், யாழ் செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான நீதியான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் பாகமான கறுப்பு ஜூலை 42 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை பதாதைகள் மூலம் முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றது.




