‘கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது’ என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: – கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனிடம், சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்தவர்கள், அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
உதயசூரியனின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம். திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.
ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள். அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களில் எல்லாம், கையில் கிடைக்கும் துறைகளில் எல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இது தான் நடக்கும். கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது. – இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.